

சில்லறைப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் 1 அன்று அறிமுகப்படுத்தி உள்ளது. மொத்தப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை நவம்பர் 1அன்று பரீட்சார்த்த முறையில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் ரூபாய் (e₹-R) தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து இவை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
ரூ.1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2,000 மதிப்பிலான டிஜிட்டல் ரூபாய், முதற்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் புழக்கத்துக்கு வந்துள்ளன. சில்லறை வர்த்தகத்துக்கான டிஜிட்டல் ரூபாயை விநியோகிக்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், யெஸ் பேங்க், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அகமதாபாத், காங்டாக், குவாஹாட்டி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, சிம்லா, லக்னோ, பாட்னா ஆகிய நகரங்களுக்கும் கோட்டக் மஹிந்திரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய வங்கிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் ரூபாய், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஆகியவற்றின் வடிவில் இருக்காது. ஆனால், ரூபாய் நோட்டுகளில் இருப்பதைப் போன்ற வரிசை எண்களைக் கொண்டிருக்கும்.
ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க 2021-22 நிதி ஆண்டில் ரிசர்வ் வங்கி சுமார் ரூ.4,000 கோடி செலவிட்டுள்ளது; இது 2008-09 நிதி ஆண்டில் செலவிடப்பட்ட தொகையைவிட 1.5 மடங்கு அதிகம். இந்தப் பின்னணியில் டிஜிட்டல் ரூபாயின் வருகை, காகிதப் பணத்தை அச்சடிப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான செலவைப் பெருமளவு குறைக்கும்.
டிஜிட்டல் ரூபாய் பரவலான பயன்பாட்டுக்கு வரும்போது, காகிதப் பணத்தை அச்சடிப்பதற்கான தேவை குறையும். மேலும், கள்ளநோட்டுப் புழக்கத்தையும் கறுப்புப் பணத்தையும் முழுமையாக ஒழிக்க முடியாவிட்டாலும், அவற்றின் அளவைக் குறைக்க டிஜிட்டல் ரூபாய் உதவும் என்றும் நம்பப்படுகிறது.
எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி இயங்கும் கிரிப்டோகரன்சிகளைப் போல் அல்லாமல், நாட்டின் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ், இந்த டிஜிட்டல் யுகத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள டிஜிட்டல் ரூபாய் வழிவகுக்கிறது.
கடன்-பற்று அட்டைகள், இணையதளம் என எதுவுமின்றி இணைய இணைப்பில்லாத சாதாரண கைபேசி மூலமாகவே டிஜிட்டல் ரூபாயைப் பயன்படுத்த முடியும். இடைத்தரகர்கள், நிறுவனங்கள் எதுவுமின்றி அரசுத் திட்டங்களின் நிதி நேரடியாகப் பயனாளிகளைச் சென்று சேர்வது உள்ளிட்ட பல்வேறு சாத்தியங்களை உள்ளடக்கியிருக்கும் டிஜிட்டல் ரூபாய், இந்தியப் பொருளாதாரத்தில் திருப்புமுனையாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.