Published : 08 Dec 2022 06:18 AM
Last Updated : 08 Dec 2022 06:18 AM

தென்னங்கன்றுகள், பயறு விதைகள் விநியோகம் தொடக்கம்; கரும்புக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை: ஆணைகளை வழங்கினார் ஸ்டாலின்

சென்னை: விவசாயிகள் நலனுக்காக தென்னங்கன்றுகள், பயறு விதைகள் விநியோகத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கியதுடன், 20 நடமாடும் காய்கனி அங்காடிகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத்தின் சார்பில் திருநெல்வேலி - என்ஜிஓ காலனி, திண்டுக்கல் - வேடசந்தூர், திருச்சி - மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் - பூலவாடியில் 250 டன் கொள்ளளவு கிடங்கு, விழுப்புரம் - திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பரிவர்த்தனை கூடம், கடலூர் - வேப்பூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டிடம் தரம் உயர்த்தல், மயிலாடுதுறை - சீர்காழியில் 2,000 டன் கொள்ளவு கிடங்கு, பரிவர்த்தனைக் கூடம், அலுவலக கட்டிடம், குத்தாலத்தில் பரிவர்த்தனைக் கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கான ஓய்வறை, அலுவலக கட்டிடம், உலர் களம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. தோட்டக்கலை துறை சார்பில் கிருஷ்ணகிரி - தளி, தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக ரூ.15.30 கோடியில் கட்டப்பட்டுள்ள, மேம்படுத்தப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

19 லட்சம் தென்னங்கன்றுகள்: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை, இந்த ஆண்டில் 3,204 ஊராட்சிகளில் செயல்படுத்த, ரூ.300 கோடியில் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒரு ஊராட்சியில் 300 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் ரூ.11.50 கோடியில் 19.16 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுதவிர, வேளாண் விளை நிலங்களில் மண் வளத்தை அதிகரிக்க, சம்பா நெல் அறுவடைக்கு பிறகு, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை 10 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யும் விதமாக சான்று பெற்ற விதைகளை வழங்க ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 2 விவசாயிகளுக்கு பயறு விதைகளை முதல்வர் வழங்கினார்.

கடந்த 2021-22 அரவைப் பருவத்துக்கு மத்திய அரசு ஆதார விலையாக கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,755 அறிவித்துள்ளது. இதைவிட கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கும் வகையில் தமிழக அரசு ரூ.199 கோடி ஒதுக்கியது.

டன்னுக்கு ரூ.2,950: அதன்படி, தமிழகத்தில் இயங்கிவரும் 2 பொதுத்துறை, 15 கூட்டுறவு மற்றும் 15 தனியார் சர்க்கரைஆலைகளுக்கு கரும்பு வழங்கியவிவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.195 சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.2,950 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 1.21 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் இத்திட்டத்தை 2 கரும்பு விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுதவிர கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோர் இல்லத்துக்கே சென்று பண்ணை காய்கறிகளை விற்பனை செய்யும் வகையில், 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், தலைமைச் செயலர் இறையன்பு, சர்க்கரைத் துறை ஆணையர் சி.விஜயராஜ்குமார், வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, ஆணையர் ஆ.அண்ணாதுரை, வேளாண்வணிகத் துறை இயக்குநர் ச.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x