

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற கன்டெய்னர் வாகனத்தின் மீது வேன் மோதிய விபத்தில், சென்னை பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு, பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த 10 பேர் வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை 4 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கன்டெய்னர் லாரி மீது மோதியது. அதேநேரத்தில், பின்னால் வந்த மற்றொரு வாகனமும் வேன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், வேன் இரண்டு வாகனங்களுக்கு நடுவில் சிக்கி உருக்குலைந்தது. இதில், வேனில் பயணித்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (70), சசிகுமார் (35), தாமோதரன் (28), ஏழுமலை (65), கோகுல்நாத் (33), சந்திரன் (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், ராமமூர்த்தி (35), சதீஷ்குமார்(27), ரவி(26), சேகர்(37), அய்யனார்(34) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மதுராந்தகம் போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் ஆறுதல்: செங்கல்பட்டு எஸ்பி (பொறுப்பு) சுதாகர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து போலீஸாரிடம் கேட்டறிந்தார். விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, உயரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை அறிவுறுத்தினார். பின்னர், உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு: சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதோடு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.