Published : 01 Jul 2014 11:57 AM
Last Updated : 01 Jul 2014 11:57 AM

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை: ஸ்ரீரங்கம் விழாவில் முதல்வர் ஜெயலலிதா உறுதி

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டவுடன் அணையின் நீர்மட்டத்தை முதல்கட்டமாக 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.171.27 கோடிக்கு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, ரூ.193.14 கோடிக்கு முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் ரூ.63.49 கோடிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்து ஜெயலலிதா பேசியது: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் விலையில்லா அரிசி, மானிய விலையில் மளிகைப் பொருள்கள், கட்டணமில்லா கல்வி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக மக்களின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் பிரச்சினையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மூலம் போராடி மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழக மக்களின் உரிமையை நிலைநாட்டியுள்ளேன். இதனை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் ஏதுவாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதல்கட்டமாக 142 அடியாக உயர்த்தும் வகையில் தமிழகம், கேரளம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமம் ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டவுடன் முதல்கட்டமாக அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை முன்னிறுத்தியும், செய்யப் போகும் சாதனைகளை எடுத்துக் கூறியும் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு அமோக வெற்றிபெற்றோம்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அண்ணா. அப்படியெனில் மக்களாகிய நீங்கள்தான் மகேசன். மகேசனாகிய மக்கள் எப்போதும் என் இருதயத்தில் இருக்கிறீர்கள். உங்கள் இருதயங்களில் நான் என்றென்றும் குடிகொண்டிருக்கிறேன். அதனால்தான் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோகமான வெற்றியை அளித்தீர்கள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றியை எனக்கு நல்கிய தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க, தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட, அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழகத்தை அழைத்துச் செல்ல நான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

விழாவில் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி, அரசு தலைமைக் கொறடா ஆர்.மனோகரன், திருச்சி மக்களவை உறுப்பினர் ப.குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x