

கோவை: அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க அரசு நில ஆர்ஜித பணியை தொடங்கினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவை மாவட்டம் அன்னூரில் தமிழக அரசு சார்பில் விளைநிலங்களில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: விவசாயம் செய்யும் பெண் பணியை விடுத்து பசியுடனும் வயிற்றெரிச்சலுடனும் தரையில் அமர்ந்து யோசிக்க தொடங்கினால், கோட்டை உள்பட என்ன மாற்றங்கள் நடக்க வேண்டுமோ, அவை அனைத்தும் நடக்கும்.
நாங்கள் ஏற்கெனவே ஒரு முறை விவசாயிகளை சந்தித்துச் சென்றோம். இதை அறிந்து தமிழக அரசு தொழிற்பேட்டை அமைக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்தது. சில நாட்களுக்கு பின் மீண்டும் அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் 3,862 ஏக்கர் நிலம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்துக்கு ஆர்ஜிதம் செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது.
விவசாயத்தை வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும். திமுக அரசுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. விவசாயிகளை புரிந்து நடந்தவர் காமராஜர் தான். தண்ணீர் வசதி இருந்தால் தரிசு நிலத்தை கூட விளைநிலங்களாக மாற்றிவிடலாம். இதை கருத்தில் கொண்டே தமிழகத்தில் பல அணைகள், கால்வாய்களை கட்டினார்.
அவிநாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டு தற்போது தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ள நிலத்தில் வெங்காயம், வாழை, மஞ்சள், புதினா உள்ளிட்ட பல விளைபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்காக 48,195 ஏக்கர் ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசாங்க குறிப்பில் உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நாங்குநேரியில் 2,518 ஏக்கர் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. ஒரு நிறுவனம் கூட இன்றுவரை தொடங்கப்படவில்லை. தூத்துக்குடி துறைமுகத்துக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கே இந்த நிலை என்றால் அன்னூர் பகுதியின் நிலை எப்படி இருக்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் 2021-ம் ஆண்டில் இந்தியாவில் அந்நிய முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது. தொழிற்பேட்டை அமைக்க தரிசு நிலங்கள் வேண்டும் என்றால் தமிழக அரசு தூத்துக்குடி, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர் பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்தலாம்.
எதிர்ப்பை மீறி அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், நமது நிலம் நமதே விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் குமார. ரவிக்குமார், செயலாளர் ராஜா உள்ளிட்ட விவசாயிகள், பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.