

சென்னையில் இருந்து ரூ.4 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுடன் மும்பை சென்ற பயணியிடம் அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து மும்பைக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்யும் சென்னையைச் சேர்ந்த மாணிக்கராஜ் என்பவரிடம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உடனடியாக மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மும்பையில் விமானத்தில் இருந்து இறங்கி வந்த அவரது கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.4 லட்சம் மதிப்புக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.