

பூந்தமல்லி: பெற்றோரின் தியாகத்தால்தான் பிள்ளைகள் பட்டம் பெறுகின்றனர் என தனியார் நிகர் நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை, மதுரவாயலில் செயல்படும் தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, நேற்று திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடியில் நடைபெற்றது.
இரு அமர்வுகளாக நடந்த இந்த விழாவில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் பயின்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கவுரவ பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கினார்.
பின்னர் தமிழிசை பேசியதாவது: தடுப்பூசி, மருந்துகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வந்த இந்தியா, தற்போது, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது. ஜி 20 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவது நமக்கெல்லாம் பெருமை.
பெற்றோரின் தியாகத்தால் தான் பிள்ளைகள் பட்டம் பெற முடிகிறது. ஆகவே, பிள்ளைகள், பெற்றோரை மரியாதையுடனும், அன்புடனும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சாதனையாளர்களாக மாறப் போகிற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். தன்னம்பிக்கையோடு மாணவர்கள் முன்னேற வேண்டும். குடும்பத்தை, வீட்டை, நாட்டை முன்னேற்ற பாடுபட வேண்டும். சவால்களை தாண்டுவதுதான் வாழ்க்கை. கடுமையான உழைப்பு மாணவர்களை சாதனையாளராக மாற்றும்.
இந்தியாவில் இளம்வயது ஆளுநர் நான்தான். புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தை எப்படி கையாளுவார் என விமர்சனம் செய்தனர். அதனை சிறப்பாக கையாண்டதால், புதுச்சேரி பொறுப்பு ஆளுநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளேன்.
நான் மகப்பேறு மருத்துவர் என்பதால் ஒரு குழந்தையை மட்டுமல்ல. 2 குழந்தைகளையும் கையாண்டு என்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தேன். இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: இந்தியா வரும் காலத்தில் துருவ பகுதிகளில் செயற்கைகோள் அனுப்பி ஆய்வு செய்ய உள்ளது. 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் தொழில்நுட்பம் சிறப்பாக வளர்ந்துள்ளது.
நாம் எதிர்காலத்தில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு போக வேண்டாம். வெளிநாட்டினர் வாய்ப்புகளுக்காக இந்தியாவுக்கு வருவார்கள். அந்த அளவுக்கு இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவை இன்னும் சிறப்பான நாடாக மாற்ற எல்லோரும் பாடுபட வேண்டும்.
இன்று பட்டம் பெறும் மாணவர்களிடம் அவர்களது பெற்றோரும் நாடும் நிறைய எதிர்பார்க்கிறது.அந்த எதிர்பார்ப்பை, கனவை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் இளைஞர்களுக்கு உள்ளது. நிறைய உயரங்களை நீங்கள் அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
எதிர்காலத்தில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு போக வேண்டாம். வெளி நாட்டினர் வாய்ப்பு தேடி இந்தியாவுக்கு வருவார்கள்.