Last Updated : 20 Dec, 2016 11:05 AM

 

Published : 20 Dec 2016 11:05 AM
Last Updated : 20 Dec 2016 11:05 AM

நொய்யல் இன்று 9: மீண்டும் துள்ளி எழுமா நீரோடைகள்?

வனப் பகுதிகளில் அமைக்கப்பட்ட 25000 நீர்த்தேக்கக் குழிகள்:



*

நொய்யல் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான போளுவாம்பட்டி வனச் சரகத்துக்குள் வருகின்றன. ஏறத்தாழ 14 சதுர கிலோமீட்டர் பரப்புகொண்ட இந்த வனச் சரகத்தில் மங்கலப்பாளையம் கிழக்கு, மேற்கு, சாடிவயல், வெள்ளப்பதி, முள்ளாங்காடு, பூண்டி தெற்கு, மத்தியம், வடக்கு, நரசீபுரம், தேவராயபுரம், கெம்பனூர், மருதமலை பிரிவுகள் அடங்கியுள்ளன.

இவற்றில் கூத்தாடி மலை கிளை ஆறு, சுருளி ஆறு, மங்கலப்பாளையம் வாய்க்கால் ஆறு, பெரியாறு, சின்னாறு, அணை ஆறு, சாமி முடியாறு, கூடுதுறை ஆறு, ஆனை மடுவு பள்ள ஆறு, பாபநாச ஆறு, தாணிக்கண்டி நீலியாறு, கல்லாறு ஆறு என பல்வேறு ஆறுகள் நீரோடைகளாகப் பொங்கி வருகின்றன.

தாணிக்கண்டி வனக் கிராமத்தில் நீலியாறுக்கு குறுக்கே கிடக்கும் மரம்.

இந்த ஆறுகளுடன் நாய் உருட்டிப்பள்ளம், ஆனைகுழி பள்ளம், அண்ணன் தம்பி பள்ளம், ஊத்துப்படுகை அரச மரப்பள்ளம், வாய்க்கால் குரிசல் பள்ளம், பள்ள அலகு ஓடை, குத்துப்பள்ளம், கொடிவேலி அம்மன் கோவில் பள்ளம், தண்ணீர் பள்ளம் ஓடை, போராத்தி பள்ளம், ஜாகீர் போரத்தி பள்ளம். ஆனைமடுவு பள்ளம், ஆனைக்கால் குழிப்பள்ளம். மிச்சை விரட்டி பள்ளம், பலாமரத்து தோப்பு பள்ளம், மூங்கில் காட்டுப்பள்ளம், கம்பெனி காட்டுப்பள்ளம், கண்ணன் காட்டுப்பள்ளம், கொன்னை மரத்தோட்டப்பள்ளம், பால்குண்டிப்பள்ளம், ஈட்டி மரப்பள்ளம், தீட்டுக்கண்டி பள்ளம், வழிக்காட்டி பள்ளம், பால் ரங்கநாதர் கோவில் பள்ளம், வேட்டைக்காரன் கோவில் பள்ளம், இச்சுக்குழி பள்ளம், அட்டுக்கல் பள்ளம், தாளியூர் அணை மதகுப் பள்ளம், ஆணை மதகுப்பள்ளம், பத்திரகாளியம்மன் கோவில் பள்ளம், கிரீன் ஹோம் கேட்டு பள்ளம், பாறைக்கிணறு கோவில் பள்ளம், மருதமலை அடிவார ஊத்துப்பள்ளம், பாரதியார் பல்கலைக்கழக பள்ளம், கணுவாய் கருப்பராயன் கோவில்பள்ளம் என ஏராளமான நீரோடைகள், நொய்யலின் முக்கிய 3 கிளைகளில் இணைகின்றன.

இதில் முள்ளாங்காடு சுற்றுப்பகுதிகள் (2,000 ஹெக்டேர்), பூண்டி, தாணிக்கண்டி வடக்கு, தெற்கு, கிழக்கு பகுதிகள் (2,500 ஹெக்டேர்), வைதேகி நீர்வீழ்ச்சி (2,000 ஹெக்டேர்) ஆகியவை நொய்யலின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இனம் பிரிக்கப்பட்டுள்ளன. போளுவாம்பட்டி வனச் சரகத்தில் காப்புக் காடுகள் 3 பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் 2-வது பிளாக் காப்புக் காடுகளில்தான் நொய்யலின் நீர்ப்பிடிப்புப்பகுதிகள் முழுமையாக அடங்கியுள்ளன.

ஆறுகளை உருவாக்கும் பசும் புல்வெளிகள்

இவற்றில் குறிப்பிட்ட தூரம் வரை பல்வேறு மரங்கள், அவற்றுக்குமேலே பசும்புல்வெளிகள் உள்ளன. வால்பாறை மலைக்காடுகளில்தான் அதிகமுள்ள பசும்புல்வெளிகள், பரம்பிக்குளம், ஆழியாறு, சோலையாறு, அப்பர் நீராறு, லோயர் நீராறு ஆகிய ஆறுகளை உருவாக்குகின்றன.

மேலும், இவை, வைதேகி நீர்வீழ்ச்சி அருவி, அணையாத்தா ஆறு, கோவை குற்றாலம் ஆகியவற்றுக்கு மேலே நிறைந்திருந்து, மழைக்காலங்களில் பெருமளவு தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொண்டு, கோடையிலும் நிலத்தில் நீரைச் சொரிய வைக்கின்றன. இதனால், நீரோடைகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருகிறது.

இந்த பசும் புல்வெளிகளையும், அது விடும் நீர்ச்சொரிவையும், அதன் கீழுள்ள நிலங்களில் பாதுகாத்து வைக்கவும், அழியாமல் காக்கவும் என்ன செய்யலாம்?

தீர்க்கமாக யோசித்த வனத் துறையினர் 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டம் வகுத்தனர். 5 மீட்டருக்கு 1 மீட்டர் நீள, அகலத்தில், 35 அடி ஆழத்தில் பசும் புல்வெளிகளுக்கு கீழே உள்ள நிலப்பரப்பில், குறிப்பிட்ட இடைவெளியில் 25 ஆயிரம் நீர்த்தேக்கக் குழிகளை வெட்டினார்கள்.

மழைக்காலத்தில் ஓடும் நீரைத் தேக்கிவைத்து மலைப்படுகைகளில் நிலத்தடி நீரை ஊற வைப்பதும், பசுமைமாறாக் காடுகளின் நீர்ச்சொரிவை துளி கூட சேதமில்லாமல் பாதுகாப்பதும்தான் இந்தக் குழிகள் அமைப்பதன் நோக்கம்.

தவிர, இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஓடும் கிளை ஆறுகள், பள்ளங்களுக்கு குறுக்கே 10 தடுப்பணைகள், 5 கசிவுநீர்க் குட்டைகள் அமைக்கப்பட்டன. காடுகளில் சமீப காலங்களில் அழிந்து வரும் தாவரங்களான மூங்கில், ஆல், அரசு, குமிழ், வெப்பாலை, விலா ஆகியவற்றை கொண்டு தீவனத் தோட்டங்களை உருவாக்கினர்.

இதனால் மண் அரிமானம் தடுக்கப்படும், தண்ணீர் ஆழத்துக்குச் சென்று ஊறிக்கொண்டே இருக்கும் என்றெல்லாம் திட்டமிட்டு, இதை செயல்படுத்தினார்கள். இதற்காக நபார்டு வங்கி மூலம் நிதியும் பெறப்பட்டது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு 3 ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. அதனால் ஏதும் பயன் விளைந்திருக்கிறதா? அதன் அடையாளமாவது நொய்யலின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் காணப்படுகிறதா என்று கேட்டால், இல்லை என்றே பலரும் பதில் சொல்கிறார்கள்.

சிறப்பு கவனம் செலுத்துகிறோம்…

இதுகுறித்து போளுவாம்பட்டி வனச் சரகர் தினேஷ்குமார் கூறும்போது, “நொய்யல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வனத் துறை சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. அதன் உச்சகட்டமாகத்தான் 25 ஆயிரம் கசிவு நீர்க்குட்டைகள் நொய்யல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உருவாக்கப்பட்டன. சிறிய அளவிலான அவற்றை வெட்டி 3 ஆண்டுகளாகிவிட்டன. அவை பசும்புல்வெளிகள் அமைந்திருக்கும் பகுதிக்கு கீழேதான் அமைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல, மான்கள், யானைகள் உள்ளிட்ட விலங்குகளுக்காக தீவனப்புல் காடுகளும் அங்கே உருவாக்கப்பட்டுள்ளன. அவை மெல்ல, மெல்ல பயன் அளிக்க ஆரம்பித்துள்ளன.

மேலும், நரசீபுரம் சோதனைச்சாவடியைத் தாண்டி வைதேகி அருவிக்கு மக்கள் யாரையுமே 15 ஆண்டுகளாக அனுமதிப்பதில்லை. அதனால்தான், அப்பகுதியில் அடர்ந்த மரங்கள் நெருக்கமாக வளர்ந்துள்ளன.

ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவை குற்றாலத்துக்கு வாகனங்களில் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 2009-ம் ஆண்டு முதல் கோவை குற்றாலத்துக்கு 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாடிவயல் வனத்துறை சோதனைச் சாவடியிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சூழல் பாதுகாக்கப்பட்ட வனத் துறை வாகனங்களிலேயே அருவிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, திரும்ப கொண்டுவந்து விடப்படுகின்றனர்.

இங்கு வசிக்கும் பழங்குடி மக்களை பணிக்கு அமர்த்தி, வனத் துறை இப்பணியைச் செய்து வருகிறது. இதன் மூலம், பிளாஸ்டிக், பாலிதீன், சோப்பு, ஷாம்பூ போன்ற சூழல் கெடுக்கும் பொருட்கள் உள்ளே செல்வது தடுக்கப்பட்டுள்ளது. அதனால் கோவை குற்றாலம் அருவியிலிருந்தும் தூய்மையாகவே அடிவாரப்பகுதிக்கு தண்ணீர் வருகிறது.

அதேபோல, நீலியாறு வரும் வழியில் தாணிக்கண்டி பழங்குடி கிராமத்துக்கு மேலே பொதுமக்கள் யாரையுமே நீண்டகாலமாக அனுமதிப்பதில்லை. அங்கே காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தீவனப்புல் வளர்க்கப்படுகிறது. அதன் மூலம் யானைகள் காட்டை விட்டு ஊருக்குள் புகும் நிலை தடுக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

மேலும், வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை வரும் பக்தர்களை அடிவாரத்திலேயே சோதனையிட்டு, எரியும் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அவற்றை வாங்கிக் கொண்ட பின்னரே மலை மீது ஏற அனுமதிக்கிறோம்.

வெள்ளியங்கிரிக்கு செல்லும் 7 மலைகளிலும் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு பணி விழாக் காலங்களில் நடக்கிறது. இதனால் நொய்யலின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து அடிவாரம் வரை நொய்யல் நீர் சுத்தமாகவே வந்து சேருகிறது.

நல்ல காடு என்பதை அங்கு வசிக்கும் விலங்குகளின் எண்ணிக்கையைக் கொண்டே தீர்மானிக்க முடியும். கோவை வனக் கோட்டத்தைப் பொறுத்தவரை புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், சிங்கவால் குரங்குகள், புள்ளிமான், சருகுமான்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு பெருகியுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.

கோவை குற்றாலம் வனப் பகுதியில் வளர்ந்துள்ள தேக்கு மரங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x