Published : 14 Dec 2016 08:55 AM
Last Updated : 14 Dec 2016 08:55 AM

’வார்தா’ புயல்: 2-வது நாளாக மின்சார ரயில் சேவை பாதிப்பு

புயல் காரணமாக சென்னையில் நேற்று 2-வது நாளாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னையை தாக்கிய ‘வார்தா’ புயலால் தண்டவாளங்களில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக சென்னையில் நேற்று மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

மேலும் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, பறக்கும் ரயில்சேவை வழித்தடங்களில் ரயில்கள் செல்வதற்கு மின் விநியோகம் செய்த தண்டையார்பேட்டை, தாம்பரம் துணை மின் நிலையங்களில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டதாலும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, பறக்கும் ரயில் சேவை நேற்று மாலை வரையில் இயக்கப்படவில்லை. சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் மார்க்கத்தில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்பட்டது.

200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவை நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மக்கள் நடமாட்டம் மிகுந்த மாம்பலம், கிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட மின்சார நிலையங்கள் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதற்கிடையே நேற்று மாலைக்கு பிறகு சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் கணிசமாக இயக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x