

தேனி மாவட்டத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.2- க்கு விற்பனையாவதால், கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனையானது. இதையடுத்து விவசாயிகள் பலர் தக்காளி சாகுபடியில் ஆர்வம் காட்டினர். இதனால் தக்காளி விளைச்சல் அதிகரித்தது.
மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, அதன் விலை படிப்படியாக குறைந்தது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு தக்காளி விலை கிலோ ரூ.8 ஆக இருந்தது. நேற்று தக்காளியின் தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.2 முதல் 3 வரை விற்பனையானது. இத னால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.
இதுகுறித்து சின்னமனூரைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி கூறியதாவது:
16 கிலோ எடைகொண்ட ஒரு பெட்டி தக்காளி கடந்த ஆண்டு ரூ.1,200 வரை விலைபோனது. விலை உயர்ந்து கொண்டிருந்ததால் பலர் கடன் வாங்கி தக்காளி பயிரிட்டனர். பருவமழை பெய்யா ததால் கூடுதல் விலை கொடுத்து தண்ணீரை வெளியிடங்களில் விலைக்கு வாங்கி தக்காளி செடியை காப்பாற்றி வந்தோம். ஆனால், தற்போது வரத்து அதிகரித் துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து விட்டது.
கடந்த 2 நாட்களாக ஒரு பெட்டி தக்காளி ரூ.48-க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. இதனால் செலவு செய்த பணத் தைக்கூட எடுக்க முடியவில்லை. தக்காளியை பறித்து மார்க்கெட் டுக்கு கொண்டு சென்று உரிய விலை கிடைக்காத விரக்தியில், விவசாயிகள் பலர் வீதியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.
பறிப்புக் கூலிகூட கிடைக்க வில்லை என்பதால், பலர் தக் காளியை பறிக்காமல் செடிகளி லேயே விட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.