Published : 08 Dec 2022 06:16 AM
Last Updated : 08 Dec 2022 06:16 AM

ராணிப்பேட்டையில் குரோமியம் கழிவுகள் அகற்றுவது எப்போது? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள குரோமியம் தொழிற்சாலையால் குவிக்கப்பட்டுள்ள கழிவுகள். அடுத்த படம்: மழை காலங்களில் குரோமியம் கழிவுகள் மழைநீரில் தேங்கி மஞ்சள் நிற நச்சுப்பொருட்கள் கலந்து நிலத்தடி நீர்மட்டத்தை பாதித்து வருகிறது. படங்கள்: ப.தாமோதரன்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் குரோமியம் கழிவுகள் எப்போது அகற்றப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆய்வு அளவில் இருக்கும் திட்டங்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு நாடு மற்றும் அங்குள்ள மக்கள் பொருளாதாரத்தில் மேம்படுவதற்கு தொழிற்சாலைகள் இன்றியமையாதது. ஆனால், அதே தொழிற்சாலைகள் அது அமைந்துள்ள சுற்றுப்புறம், விளைநிலங்கள், மக்களின் உடல் நலத்தையும் பாதிப்பை ஏற்படுத்துபவை என்றால், அப்படிப்பட்ட தொழிற்சாலைகள் தேவையா? என்ற கேள்விகள் எழுகின்றன.

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் தமிழ்நாடு குரோமேட்ஸ் கெமிக்கல் நிறுவனம் கடந்த 1973-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பபட்டு, 1975-ம் ஆண்டு முதல் இயங்கியது. தொடர்ந்து, இந்த தொழிற்சாலை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு, ஆரம்பத்தில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தொழிற்சாலைகளில் குரோமியம் சல்பேட், சோடியம் டைகுரோமேட், சோடியம் சல்பேட் ஆகியவை உற்பத்தி செய்து தோல்தொழிற்சாலைகளுக்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஆனால், இங்கு தயாரிக்கப்படும் ரசாயன பொருட்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை முறையாக அகற்றாமல் விட்டதால், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் மட்டுமின்றி, சுற்றுப்புறம் மற்றும் விவசாய விளைநிலங்கள், மக்களுக்கு புற்றுநோய் மற்றும் தோல் தொடர்பான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். இறுதியாக, நிலத்தடி நீர்மட்டமும் குடிப்பதற்கு மட்டுமின்றி எந்த வகையிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் தூரத்தில் இங்குள்ள தென்னைமரத்தின் இளநீரில் கூட, குரோமியம் ரசாயனத்தின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தேங்கிக் கிடக்கும் குரோமியம் கழிவுகள் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் மழைநீருடன் கலந்து, மஞ்சள் நிறத்துடன் நச்சுப்பொருள் மண்ணில் ஊறி, விளைநிலங்களை மலடாக்கி வருகிறது.

மேலும், தொழிற்சாலை மூடப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இங்கு தேங்கிக் கிடக்கும் 2.50 லட்சம் மெட்ரிக் டன் குரோமிய கழிவுகள் 2 அல்லது 4 ஹெக்டேர் பரப்பில் 3 முதல் 5 மீட்டர் உயரத்துக்கு அகற்ற மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆய்வு மட்டுமே நடத்தி வருகிறது.

இறுதியாக, கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவர் செழியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். ஆனால், அனைத்தும் அறிக்கை மற்றும் திட்டங்களாகவே மட்டுமே உள்ளது. நடைமுறை செயல்பாடுகள் இன்றளவும், தொழிற்சாலைகளில் தேங்கிக் கிடக்கும் குரோமிய கழிவுகள் போல், தேக்க நிலையிலேயே உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட சமூக ஆர்வலர் எல்.சி.மணி கூறும்போது, "இங்கு தேங்கிக் கிடக்கும் குரோமியம் கழிவுகள் காரை, ராணிப் பேட்டை, புளியங்கண்ணு, மணியம்பட்டு, அவரைக்கரை, சிப்காட் உட்பட பல இடங்களில் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு தேங்கும் கழிவுநீரால், தென்னைமரத்தின் இளநீரிலும், குரோமியம் பாதிப்புகள் இருப்பதாக ஆய்வுகள் உள்ளன.

மக்களுக்கு புற்றுநோய், சுவாச கோளாறு, சீறுநீரகம், நுரையீரல் என இன்றளவும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். குரோமிய கழிவுகளை அகற்ற ஆய்வுகள் மட்டுமே போதாது. செயல்பாடுகள் வேண்டும். இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலை பாதிப்படையாமல், விவசாயத்துக்கு பயன்படும் வகையில், அனைத்து தரப்புக்கும் வளர்ச்சி அளிக்கக்கூடிய தொழிற்சாலைகள் கொண்டு வர அரசு முயற்சி செய்ய வேண்டும்" என்றார்.

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், "குரோமியம் கழிவுகள் அகற்ற மத்திய, மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இங்கு தேங்கியுள்ள குரோமிய கழிவுகளை அகற்ற 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் விடும் பணி விரைவில் தொடங்கப்படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x