Last Updated : 07 Dec, 2022 06:51 PM

 

Published : 07 Dec 2022 06:51 PM
Last Updated : 07 Dec 2022 06:51 PM

மக்கள் எளிதாக வந்து செல்லும் இடங்களில் அரசு அலுவலகங்கள் கட்டப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து

உயர் நீதிமன்ம் மதுரைக் கிளை.

மதுரை: பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் இடங்களில் அரசு அலுவலக கட்டிடங்கள் கட்ட வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த குணசீலன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: உடன்குடியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அனல் மின் நிலையம் அருகே புகழேந்தி என்பவர் வீட்டடி மனைகளை விற்பனை செய்து வருகிறார். அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வீட்டடி மனை விற்கவில்லை. இதனால் புகழேந்தி அந்த இடத்தில் தனது மனைவியின் பெயரில் உள்ள 6 ஏக்கர் நிலத்தில் 20 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு அலுவலகம் கட்டுவதற்காக தானமாக வழங்கினார். அந்த இடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகம் நகருக்கு மத்தியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தானமாக வழங்கப்பட்டுள்ள இடம் நகரிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இருப்பினும் கரோனா காலத்தில் கட்டிடம் கட்டத் தொடங்கி தற்போது முடியும் நிலையில் உள்ளது. அதே நேரத்தில் உடன்குடி பேருந்து நிலையம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சுமார் 3 ஏக்கருக்கு மேல் காலியிடம் உள்ளது.

இந்த இடத்தில் பத்திரப்பதிவு அலுவலம் கட்டாமல் நகருக்கு வெளியே இருக்கும் இடத்தில் கட்டியுள்ளனர். பதிவுத்துறை அதிகாரிகள் தனிநபர் ஆதாரம் பெரும் நோக்கத்தில் தானமாக வழங்கிய இடத்தில் பதிவு அலுவலகம் கட்டியுள்ளனர். எனவே, உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகம் கட்டுப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் செயல்பட தடை விதித்து, நகருக்குள் செயல்பட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர். விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''அரசு அலுவலகங்கள் கட்டும்போது பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் இடங்களில் கட்ட வேண்டும். அரசு அலுவலகங்கள் கட்டும்போது இந்த நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். மனு தொடர்பாக பதிவுத்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x