திருச்செந்தூரில் தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
Updated on
1 min read

மதுரை: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆதீன நிலத்தை மீட்கவும், அந்த சொத்தை பாதுகாக்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்கள், போலி பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியன தாக்கல் செய்யப்பட்டன. திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ''திருச்செந்தூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆதீன மடத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வசமிருக்கும் ஆதீன மடத்தின் சொத்துக்களை அறநிலையத் துறை ஆணையர் உடனடியாக மீட்டு ஆதீன மடத்திடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணியை 12 வாரத்தில் முடிக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in