Published : 07 Dec 2022 06:19 PM
Last Updated : 07 Dec 2022 06:19 PM
சென்னை: "தமிழகத்தில் இன்று வரை செயல்பாட்டில் உள்ள 108 அவசர உதவி வாகனங்கள் 1343. அவற்றில், 300 வாகனங்கள் உயிர்காக்கும் அதிநவீன கருவிகள் பொறுத்தப்பட்டு முழுமையான உயிர் காக்கும் வாகனங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவசர மருத்துவ பட்ட மேற்படிப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் விபத்து அதிகமாக நடக்கும் 500 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களுக்கு அருகில் இருக்கும் 679 மருத்துவமனைகள் (அரசு மருத்துவமனைகள் 232, தனியார் மருத்துவமனைகள் 447) மூலம் இந்ததிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விபத்து நேர்ந்தவுடன் உடனடியாக 48 மணிநேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு அரசு ரூ.1 லட்சம் வரை காப்பீடு திட்டத்தின் மூலம் செலவிடுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 1,31,164 பேர் பயனடைந்துள்ளனர், ரூ.116,79,99,373 செலவிடப்பட்டுள்ளது. விபத்து நேர்கின்ற பொழுது ஆறு மணி நேரத்திற்குள் உயிர்கள் காக்க அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மே மாதம் முதல் 6 மணிநேரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்தவர்களின் எண்ணிக்கை என்பது 23% இருந்தது. அது இந்த மாதம் முதல் 69% அளவிற்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இருக்கின்ற மருத்துவ கட்டமைப்பை ஒன்றிய அரசு தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருக்கிறது. 2008-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி 108 என்னும் அவசர வாகன உதவியை தொடங்கி வைத்தார். அதில் இன்று வரை 1,343 வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில், 300 வாகனங்கள் உயிர்காக்கும் அதிநவீன கருவிகள் பொறுத்தப்பட்டு முழுமையான உயிர் காக்கும் வாகனங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, இந்த விபத்துகள் நேர்ந்தவுடன் இந்த வாகனங்களோடு தொடர்பு கொள்வது அந்த வாகனங்கள் எந்த மருத்துவமனைக்கு செல்கிறது, விபத்துக்குள்ளானவர்களுக்கு எந்த மாதிரியான விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது, அந்த விபத்து நேர்ந்தவரின் ரத்தப்பிரிவு என்ன போன்றவைகள் விபத்து நடந்த இடத்திலிருந்து மருத்துவமனைக்கு வருகின்ற நேரம் வரை Trauma Register என்று சொல்லக்கூடிய Software மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு தெரிவிப்பதும், அந்த மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் தயார் நிலையில் அந்த ரத்தப்பிரிவிற்கு ஏற்ப தயார் செய்து வைத்திருப்பது, எந்த மாதிரியான சிகிச்சைகள் அளிப்பது முடிவெடுத்து காத்திருப்பது போன்ற நிகழ்வு இன்று தமிழகத்தில் முன்மாதிரியாக இருப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இத்தகைய அவசர சிகிச்சை திட்டங்களினால், எதிர்காலத்தில் உலக அளவில் தமிழ்நாட்டில் விபத்துகளினால் ஏற்பட்டிருக்கும் மரணங்களின் சதவீதம் குறைந்த அளவே பதிவாகும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT