Published : 07 Dec 2022 06:12 AM
Last Updated : 07 Dec 2022 06:12 AM
சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தானே நீடிப்பதாகவும், முன்னாள் முதல்வர் பழனிசாமியை கட்சியின் பொறுப்பாளராக கருத வேண்டாம் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையிலான மோதல் வலுத்துவரும் நிலையில், அண்மையில் டெல்லியில் நடந்த ஜி20 மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இது ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு ஓபிஎஸ்அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த டிசம்பர் மாதம் நடந்த கட்சிக் கூட்டத்தில் நான் ஏகமனதாக ஒருங்கிணைப்பாளர் பதவிக்குத் தேர்வானேன். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அதிமுக தலைமைப் பொறுப்பில் பழனிசாமி இல்லை என்பதை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அதிமுகவில் சிலர் ஒன்று சேர்ந்து பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்து இருப்பதாகக் கூறுகின்றனர். அதிமுகவின் சட்ட விதிகளுக்கு இது முற்றிலும் விரோதமானது.
பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதை தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
எனவே எதிர்காலத்தில் இத்தகைய தவறு நடக்காமல் மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு பழனிசாமியை இனியும் மத்திய அரசு அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT