

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் சரகத்துக்குட்பட்ட பட்டவர்த்தி மதகடி பகுதியில், அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, அந்தப் பகுதியில் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பட்டவர்த்தி மதகடி பகுதியில் கடந்தாண்டு அம்பேத்கர் நினைவு நாளின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியின்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், நிகழாண்டு அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, பட்டவர்த்தி மதகடி பகுதியில் அம்பேத்கர் படத்தை வைத்து மரியாதை செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டு, மயிலாடுதுறை கோட்டாட்சியருக்கு மணல்மேடு காவல் ஆய்வாளர் கடிதம் அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் யுரேகா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் டிச.3-ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், அதே பகுதியில் டிச.6-ம் தேதி மூமுக சார்பில் கட்சி அலுவலகத் திறப்பு மற்றும் படத் திறப்பு நடத்த அனுமதி கோரியிருந்தனர்.
இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், பொது அமைதியைப் பாதுகாக்கும் வகையில், பட்டவர்த்தி மதகடி பகுதியிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் டிச.10-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144(3)ன் கீழ் கோட்டாட்சியர் வ.யுரேகா தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், பட்டவர்த்தி மதகடி பகுதியில் 2 பேருக்கு அதிகமாகக் கூடி நின்று, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எவ்வித செயல்களிலும் ஈடுபடக் கூடாது. அந்தப் பகுதியில் சிலை, உருவப் படம், பேனர், கொடி போன்ற எந்த ஒரு அமைப்பையும் புதிதாக உருவாக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அந்தப் பகுதியில் 500-க்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அந்தப் பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.