

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் அடுத்தடுத்து செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க சைபர் க்ரைம் போலீஸார் துணையுடன் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தினர். இதனால், ஜெயலலிதா நினைவிடத்தில் மட்டும் அல்லாமல் மெரினா முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அஞ்சலி செலுத்த வந்தவர்கள்: இந்த நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர்கள் சிலர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களின் செல்போன்கள் மற்றும் மணிபர்சை நைசாக ஜேப்படி செய்துள்ளனர். நினைவு தின நிகழ்வு தொடர்பாகச்செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிறுவன பணியாளர்களின் செல்போன்களும் திருடுபோயின. இப்படி 15-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன், 2 பணப்பை திருடப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் புகார் அளிக்காமல் சென்றுவிட்டனர்.
கேமரா காட்சிகள் ஆய்வு: இந்த விவகாரம் குறித்து அண்ணாசதுக்கம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்டமாக சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் செல்போன் திருடர்கள் பற்றிய விவரங்களை அண்ணா சதுக்கம் போலீஸார் சேகரித்து வருகின்றனர். இதற்காகத் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. மெரினாவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றிஆய்வு செய்யும் பணியும் தொடங்கியுள்ளது.