Published : 07 Dec 2022 06:59 AM
Last Updated : 07 Dec 2022 06:59 AM

ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு: மாற்றுத் திறனாளிகள் அமைப்புகள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.1500 ஆக உயர்த்திஅறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த நவ.3-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், “வருவாய்த் துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு தற்போது அவர்கள் பெறும் ஓய்வூதியம் ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.1500 ஆக வரும் ஜன.1 முதல் உயர்த்தி வழங்கப்படும்’’ என்றார்.

பல்வேறு அமைப்புகள்: அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தமிழக முதல்வரை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சிராணி, டிசம்பர்-3 இயக்க ஒருங்கிணைப்பாளர் டி.எம்.என்.தீபக்,தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பி.சிம்மச்சந்திரன், தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குநர் பி. மனோகரன், தமிழ்நாடு உதவிக்கரம் - மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் டி.ஏ.பி.வரதகுட்டி ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேலும், இந்திய மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் தலைவர் ம.சகாதேவன், நேத்ரோதயா நிறுவனர் – அறங்காவலர் சி.கோவிந்தகிருஷ்ணன், தமிழ்நாடுமாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ.தங்கம், காது கேளாத மற்றும்பேச இயலாத மாற்றுத் திறனுடையோர் பாதுகாப்பு பவுண்டேசன் தலைவர் மற்றும் நிறுவனர் சு.அப்துல் லத்தீப், சிவகங்கை மாவட்டம், தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் கே.ஜே.டி.புஷ்பராஜ், தமிழ்நாடு உயரம் குறைந்தோர் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் எம்.ஜி.ராகுல், தென்காசி மாவட்டம், அமர் சேவா சங்கத்தின் உறுப்பினர் என்.அழகப்பன், தமிழ்நாடு பார்வையற்றோர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்பூங்காவனம், காது கேளாதோருக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த ரமேஷ் பாபு மற்றும் மோகன், அனைத்து குறைபாடுகள் உள்ள பெண்களின் உரிமைகளுக்கான சங்கத்தின் பி.அருணாதேவி உள்ளிட்டோரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x