

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று கூறியதாவது:
டெல்லியில் நடக்கும் ஜி20 மாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து 40 கட்சிகளை அழைத்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருப்பதால் அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம். அதிமுக கட்சியிலேயே ஒற்றுமை இல்லை. அதிமுக கட்சியினர் குழம்பிய மனநிலையில் உள்ளனர். தற்போதுஇரட்டை இலைதான் அக்கட்சியின் தலைமை என்பதே உண்மை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, ‘அம்மா மறைந்த இந்நன்நாளில்’ என்று உறுதிமொழியை வாசிக்கிறார். அதை அவருடன் இருந்தவர்களும் திரும்ப வாசிக்கின்றனர். இதைப் பார்த்த அனைவருக்குமே அதுதர்ம சங்கடத்தை ஏற்படுத்திஉள்ளது.
அசுர பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்துவதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகூட்டணி அமைத்து போராடினால்தான் வெற்றி பெற முடியும். திமுகவை எதிர்த்து நிற்கும் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நின்றால்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும். ஆனால், பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைப்பது என்பதற்கு வாய்ப்பே இல்லை.அது என்றைக்கும் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.