

சென்னை: தனியார் நிறுவன அதிகாரியிடம் பெண் குரலில் பேசி திருமண ஆசைகாட்டி, நூதன முறையில் ரூ.20.90 லட்சம் மோசடி செய்ததாக மருத்துவ விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புழுதிவாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரகுராம் (39). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மூத்த செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த மே மாதம் ரகுராமின் தந்தை பாலசுப்பிரமணியன் செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் தனதுபெயர் கல்யாணராமன் என்றும், சேலத்தில் உள்ள தனது அண்ணனின் மகள் ஐஸ்வர்யா என்பருக்கு மாப்பிள்ளை தேடி வருவதாகவும், மகனின் விவரங்களை அனுப்புமாறும் கூறியுள்ளார்.
இதை நம்பிய ரகுராமின் தந்தைபாலசுப்பிரமணியன், தனது மகனின்தகவல்களை அனுப்பியுள்ளார். அதன்பிறகு ரகுராமுடன் ஐஸ்வர்யா என்பவர் செல்போனில் தொடர்புகொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளார். ஐஸ்வர்யாவின் பேச்சில் ரகுராம் மயங்கி உள்ளார்.
இந்நிலையில், ‘தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவ சிகிச்சைக்கு பணம் வேண்டும்’ என ஐஸ்வர்யா கூறியுள்ளார். அதைநம்பிய ரகுராம், ரூ.8 ஆயிரத்தை கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார். அதன்பின், தனது தாயாரின் மேல்சிகிச்கைக்கு பணம் வேண்டும் எனகூறி பல முறை ரகுராமிடம் படிப்படியாக ரூ.20 லட்சத்து 90,700 வாங்கியுள்ளார்.
திருண ஏற்பாடுகள் பற்றி ரகுராம் கேட்டபோது, பல்வேறு காரணங்களை கூறி தட்டிக்கழித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த ரகுராம், பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ரகுராம் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சேலம் சின்ன திருப்பதி, அண்ணாமலை நகரை சேர்ந்த தாத்தாதிரி (49) என்பவர், ஐஸ்வர்யா என்ற பெயரில் பெண் குரலில் பேசி ரகுராமிடம் இருந்து பணத்தை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். தோத்தாதிரி மருத்துவ விற்பனை பிரதிநிதியாக வேலை செய்ததும், மோசடி செய்தபணத்தை ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.