Published : 07 Dec 2022 04:17 AM
Last Updated : 07 Dec 2022 04:17 AM

பதவி அளிப்பதாகக் கூறி உள்ளதையும் பறித்து துரோகம்: அதிமுகவில் இணைந்த திமுக முன்னாள் நகர் செயலாளர் குமுறல்

மதுரை: உறுதியளித்தபடி நகராட்சி தலைவர் பதவி தராததுடன் நகர் செயலாளர் பதவியையும் பறித்ததால் அதிமுகவில் இணைந்தேன் என திருமங்கலம் நகர் திமுக முன்னாள் செயலாளர் மு.சி.சோ.முருகன் தெரிவித்தார்.

திருமங்கலம் நகர் திமுக செயலாளராக இருந்தவர் மு.சி.சோ.முருகன். இவரதுமருமகள் சர்மிளா திருமங்கலம் நகராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார். இவர்தான் நகராட்சித் தலைவராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரம்யா தலைவராக்கப்பட்டார். நகர் செயலாளர் பதவியும் முருகனிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி, ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் முருகன் அதிமுகவில் இணைந்தார். இது குறித்து அவர் கூறியதாவது: 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். திருமங்கலம் நகராட்சித் தேர்தலில் எனது மருமகளுக்குத்தான் நகராட்சித் தலைவர் பதவி என தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன் உறுதியளித்தார்.

இதையடுத்து 27 வார்டுகளிலும் திமுகவுக்காக அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று பணியாற்றினேன். 20 வார்டுகளில் திமுக வென்றது. கடைசி நிமிடம் வரை மருமகளுக்குத்தான் சீட் என நம்ப வைத்து ஏமாற்றி விட்டனர். திடீரென ரம்யாவை வேட்பாளராக்கிவிட்டனர். நான் 13 கவுன்சிலர் ஆதரவுடன் தேர்தலில் பங்கேற்றேன். ஆனால் அதிகாரப்பூர்வ வேட்பாளர் போட்டியிடவே வரவில்லை. நான் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி திமுக நகர் செயலாளர் பதவியை பறித்துவிட்டனர்.

மீண்டும் கட்சி செயலாளர் பதவி வழங்குகிறோம் என நம்ப வைத்தனர். 8 மாதங்களாக அது வும் நடக்கவில்லை. கட்சித் தலைமை விசாரணை நடத்தியது. அனைத்து விஷயங்களையும் ஆதாரப்பூர்வமாக தலைமையிடம் தெரிவித்தேன். கடைசி வரை நம்ப வைத்து துரோகம் செய்துவிட்டனர்.

நகர் திமுக செயலாளர் பதவியை ஸ்ரீதருக்கு வழங்கிவிட்டனர். மாவட்டச் செயலாளர் மீது நான் அளித்த புகார் மீது கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்காகவும், மக்கள் பணியை தொடர வேண்டும் என்பதற்காகவும் அதிமுகவில் இணையத் திட்டமிட்டேன்.

எனக்குஏற்பட்ட இந்த நிலையை இப்பகுதி திமுகவினரும், கட்சித் தலைமையும் நன்றாக அறிந்தும் நியாயம் கிடைக்கவில்லை. இதற்காக திமுகவும், உரியவர்களும் வருத்தப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x