தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துக: வாசன்

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துக: வாசன்
Updated on
1 min read

தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை அகற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாடுமுழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் மூடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. இதனால் பல லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். குறிப்பாக தேசிய அளவில் ஆண்டுக்கு 18 லட்சம் பேரும், தமிழகத்தில் 2 லட்சம் பேரும் உயிரிழக்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தபிறகு மதுக்கடைகளை மூடுவதற்கான எந்த ஒரு ஆக்கபூர்வ நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

தமாகா கட்சியும் பூரண மதுவிலக்கு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியதையும். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டதையும், மது இல்லா சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்துகள் பெற்று அதன் பிரதிகளை ஆளுநரிடம் ஒப்படைத்ததையும் நினைவுகூற விரும்புகிறேன்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நாடுமுழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றவேண்டும்.

மேலும் பள்ளிகள், கல்லூரிகள், ஆலயங்கள், பெண்கள் அதிகம் நடமாடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், போன்ற இடங்களில் உள்ள மதுக்கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை அகற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in