

சிபிஐ கைப்பற்றியுள்ள ரூ.34 கோடி புதிய நோட்டுகள் மணல் லாரிகள் மூலம் கிடைத்த வருவாய் என சேகர் ரெட்டியும், சீனிவாசலுவும் தங்களது ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளனர்.
கைதாகியுள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் ஜேஎஸ்ஆர் இன்ப்ரா நிறுவனத்தின் செயல் இயக்குநரான சீனிவாசலு ஆகி யோர் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் இருவரும் எந்த சட்ட விரோத செயலிலும் ஈடுபட வில்லை. கடந்த டிசம்பர் 8-ம் தேதி எங்களுடைய வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி ரூ.34 கோடி புதிய நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அரசு மணல் குவாரி களில் லாரிகள் மூலமாக மணல் அள்ளும் ஒப்பந்தம் எடுத்துள்ளோம். எங்களது நிறுவனத்துக்கு சொந்த மாக மொத்தம் 425 லாரிகளும், 180 பொக்லைன் இயந்திரங்களும் உள்ளன. ஒரு லாரி மூலமாக தின மும் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரமும், ஒரு பொக்லைன் இயந் திரம் மூலம் தினமும் ரூ.19 ஆயிரத்து 500-ம் வருமானம் கிடைக்கும். இதன்மூலம் தினமும் ரூ.1.5 கோடி வருவாய் ஈட்டியதன் மூலம் கடந்த 26 நாட்களாக எங்களிடம் ரூ.34 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் இருந்தன.
இந்தப் பணம் சட்டரீதியாக சம்பாதிக்கப்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்த தொழிலில் இருந்து வருகிறோம். இதுதவிர, இதேபோல எங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.125 கோடிக்கும் முறையாக வரி செலுத்தி வருகிறோம். வங்கி அதிகாரிகள் மூலமாகவோ அல்லது இடைத் தரகர்கள் மூலமாகவோ எந்தவொரு சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை. சிலரின் தனிப்பட்ட தூண்டுதல் காரணமாக எங்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. எனவே எங்களுக்கு ஜாமீன் தர வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளனர்.