ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய பாதுகாவலர்: சமூக வலைதளங்களில் வைரல்

ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் நோயாளிக்கு இரவு நேர பாதுகாவலர் குளுக்கோஸ் ஏற்றும் காட்சி வைரலானது.
ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் நோயாளிக்கு இரவு நேர பாதுகாவலர் குளுக்கோஸ் ஏற்றும் காட்சி வைரலானது.
Updated on
1 min read

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற நோயாளிக்கு மருத்துவமனையின் பாது காவலராக பணியாற்றி வருபவர் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மோதகப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சாரங்க பாணி (52). இவர், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அவருக்கு அங்கு பணியில் இருந்த இரவு நேர பாது காவலர் (செக்யூரிட்டி) குளுக்கோஸ் ஏற்றியதாக கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு அரசு மருத்துவமனையில் இரவு நேர பாதுகாவலராக பணியாற்றி வரும் நபர் ‘குளுக்கோஸ்’ ஏற்றுவது போன்ற வீடியோ சமூக வலை தளங்களில் நேற்று பரவி வைரலானது. இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து, தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது மட்டும் அல்லாமல், திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாவும், பணியில் உள்ள மருத்துவர்கள் தங்களது கடமையை சரிவர செய்யாமல் மெத்தனம் காட்டி வருவதாக தங்களது ஆதங்கத்தை வெளிப் படுத்தினர். நோயாளிக்கு மருத்துவர் அல்லது செவிலியர் குளுக்கோஸ் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், மருத்துவமனையின் இரவு நேர பாதுகாவலர் குளுக்கோஸ் ஏற்றுவது வேதனைக்குரியது.

அந்த நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் ஆஜாக்கிரதையுடன் செயல்பட்டிருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளதாகவும், அதனால் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவர் மற்றும் செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சர்மிளாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, "சம்பந்தப்பட்ட மருத்துவர், செவிலியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் விளக்கம் அளித்த பிறகு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in