

மதுரை: ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகே சாலை அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த பெருமாள், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி முதல் துறையூர் தேசிய நெடுஞ்சாலையில் புலிவலம், பெரங்குளம் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு தார் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புலிவலம், பெரங்குளம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மனுதாரர் குறிப்பிட்டுள்ள சாலைகளில் தார் சாலை அமைக்கும் பணி முடிந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ''ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகே சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். மனு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர், முசிறி கோட்டாட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை டிச. 13-க்கு ஒத்திவைத்தனர்.