மெட்ரோ ரயில் நிலையங்களில் வங்கி அட்டை மூலம் வாகன நிறுத்த கட்டணம்: புதிய வசதி அடுத்த மாதம் அறிமுகம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் வங்கி அட்டை மூலம் வாகன நிறுத்த கட்டணம்: புதிய வசதி அடுத்த மாதம் அறிமுகம்
Updated on
1 min read

மெட்ரோ ரயில் நிலைங்களில் வாகன நிறுத்த கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதி அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, விமான நிலையம் – சின்னமலை – கோயம்பேடு வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினமும் சராசரியாக 18 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.

மெட்ரோ ரயிலில் செல்வதற்காக, வீடுகளில் இருந்து, தங்களது இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர்.

வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக ஆலந்தூர், மீனம்பாக்கம், பரங்கிமலை, கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர் உட்பட 12 ரயில் நிலையங்களிலும் வாகனம் நிறுத்தும் இடவசதி அமைக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் நிறுத்த கட்டணமாக முதல் 3 மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.5, காருக்கு ரூ.10, 3 – 6 மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.10, காருக்கு ரூ.20, 6 – 12 மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.15, காருக்கு ரூ.30, 12 மணி நேரத்துக்கு மேல் இருசக்கர வாகனத்துக்கு ரூ.20, காருக்கு ரூ.40, காலை 6 – இரவு 10 மணி

வரையில் இருசக்கர வாகனத்துக்கு ரூ.100, காருக்கு ரூ. 200என வசூலிக்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.250 எனவும், காருக்கு ரூ.500 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, வாகன நிறுத்தக் கட்டணத்தை கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு பணமாகவும், வங்கி அட்டைகள் மூலம் டிக்கெட் பெறும் வசதி தற்போது உள்ளது. இதேபோல், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்த கட்டணத்தையும் வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதியை அடுத்த மாதம் தொடங்கவுள்ளோம். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தமுள்ள 12 வாகன நிறுத்தும் இடங்களில் வங்கிகள் மூலம் தலா 2 ஸ்வைப் கருவிகள் பொருத்தி கட்டணம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in