Published : 06 Dec 2022 05:28 PM
Last Updated : 06 Dec 2022 05:28 PM

அடாப்டிவ் டிராஃபிக் சிக்னல்: சென்னை நெரிசலைக் குறைக்க வருகிறது நுண்ணறிவு போக்குவரத்து திட்டம்

போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள்

சென்னை: சென்னையில் இன்டெலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்தை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இதில் 165 போக்குவரத்து சந்திப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன.

சென்னை மாநகர் பகுதியில் 500-க்கு மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்களும், 200-க்கு மேற்பட்ட பெரிய அளவிலான போக்குவரத்து சந்திப்புகளும் உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளன. இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட நேரம் சிக்னல்களில் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த நேரங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் அவரச கால வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இதற்குத் தீர்வு காண இன்டெலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்தை சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இரண்டு பிரிவுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. போக்குவரத்து தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பில் முக்கியமாக சென்னையில் உள்ள 165 போக்குவரத்து சந்திப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன.

இந்தச் சந்திப்புகளில் அடாப்டிவ் டிராஃபிக் சிக்னல் கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவப்படவுள்ளது. தற்போது போக்குவரத்து காவலர் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தின் அடிப்படையில்தான் சிக்னல்கள் இயங்கி வருகிறது. இந்த அடாப்டிவ் முறையில் தாமாகவே திறக்கும் வகையில் சிக்னல்கள் அமைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, ஒரு போக்குவரத்து சந்திப்பில் அதிக வாகனங்கள் நின்றுகொண்டு இருந்தால், அந்த சிக்னல் தாமாகவே திறக்கப்படும். ஒரு சிக்னலில் ஆம்புலன்ஸ் வாகனம் வருவது தெரிந்தால் தொடர்ந்து 4 சிக்னல்கள் திறக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் தங்கு தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதைத் தவிர்த்து சிவப்பு விளக்குகளை மீறுபவர்களை கண்டறியும் தொழில்நுட்பம், அதிக வேகத்தில் செல்பவர்களை கண்டறியும் தொழில்நுட்பம் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன.

இரண்டாவதாக, மாநகரப் பேருந்து அமைப்பு என்னும் நடைமுறை செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி பேருந்துகளில் கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படவுள்ளது. இதன் மூலம் பேருந்துகளில் எங்கு சென்று கொண்டு உள்ளது என்பதை நிகழ் நேரத்தில் கண்டறிய முடியும். 500-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகை அமைக்கப்படவுள்ளன. இந்த தகவல் பலகையில் அடுத்த பேருந்து வரும் நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெறும். மேலும், போக்குவரத்துக் கழக பனிமனைகள் மேலாண்மை திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் 15 நாட்கள் டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x