Published : 06 Dec 2022 12:40 PM
Last Updated : 06 Dec 2022 12:40 PM

புயல், கனமழை எச்சரிக்கை | தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? - முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளைக் கண்காணிக்க பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 29.10.2022 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழைப் பெய்து வருகிறது. 1-10-2022 முதல் 05-12-2022 வரை 366.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் (376.0 மி.மீ.) காட்டிலும் 3 விழுக்காடு குறைவு ஆகும்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 5-ம் தேதி அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 6-ம் தேதியன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும், பிறகு இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து 8-ம் தேதியன்று காலை வடதமிழக கடலோரப் பகுதியின் அருகில் வந்தடையக் கூடும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக முதல்வர் அறிவுரையின் பேரில் கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு கடற்கரைப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றுள்ள 532 மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக உள்ளன. கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள 93 மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களுக்கு VHF, Sat Phones, Navtex, Navic மூலம் தகவல் தெரிவிக்கப்ட்டடு, அவர்கள் இன்று (நவ.6) கரைக்குத் திரும்புகின்றனர். மேலும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.

சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புயை பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 805 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன. பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல் துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

வானிலை முன்னெச்சரிக்கை > 07-12-2022: கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

08-12-2022: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேற்சொன்ன மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

09-12-2022: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x