Published : 06 Dec 2022 11:22 AM
Last Updated : 06 Dec 2022 11:22 AM

தமிழக மாணவர்களிடம் கற்றல் குறைபாடு - ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: தமிழக மாணவர்களிடம் கற்றல் குறைபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்த புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதற்கு தீர்வு காண வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 20 விழுக்காட்டினரால் தான் தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது; 23 விழுக்காட்டினரால் தான் அடிப்படை கணிதத்தை மேற்கொள்ள முடிகிறது என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. தமிழக மாணவர்களின் கற்றல் குறைபாடு நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினை தான் என்றாலும், அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் நடத்திய அடிப்படை கற்றல் குறித்த ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த ஆய்வுக்காக நாடு முழுவதும் 86 ஆயிரம் மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்பட்டது. தமிழகத்தில் 336 பள்ளிகளைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் 2,937 மாணவர்களிடம் தமிழ் மற்றும் கணிதப் பாடங்களில் இருந்து வினாக்கள் எழுப்பப்பட்டன. அதில், 20% மாணவர்களால் தான் தமிழை புரிந்து கொள்ள முடிகிறது; சுமார் 50% மாணவர்களால் தமிழை பிழையில்லாமல் படிக்கக் கூட முடியவில்லை என்று தெரியவந்துள்ளது.

கேரளம், கர்நாடகத்தில் 44% மாணவர்களாலும், ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் 45% மாணவர்களாலும் தாய்மொழியை நன்றாக புரிந்து கொள்ளவும், படிக்கவும் முடியும் நிலையில், தமிழக மாணவர்கள் தான் மிகவும் பின்தங்கியுள்ளனர். அதேபோல், தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 52 விழுக்காட்டினருக்கு நாள்காட்டியில் நாள், கிழமை, மாதம் ஆகியவற்றைக் கூட அடையாளம் காணமுடியவில்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கணிதத் திறனிலும் பிற தென் மாநிலங்கள் தமிழகத்தை விட உயர்ந்த நிலையில் உள்ளன.

தமிழக மாணவர்களின் கற்றல் திறன் இப்போது திடீரென குறைந்துவிடவில்லை. பல ஆண்டுகளாகவே இந்த நிலை தொடருகிறது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆசர் எனப்படும் கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கையின்படி, 2016-ஆம் ஆண்டில் தமிழக அரசு பள்ளிகளில் பயின்ற மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 17.70 விழுக்காட்டினரால் மட்டும் தான் இரண்டாம் வகுப்புக்கான தமிழ் பாடங்களை படிக்க முடிந்தது. 2018ம் ஆண்டில் இந்த விகிதம் 10.20% ஆக குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்பிலும் நன்றாக பயிலும் சில மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் மோசமாகவே இருக்கிறது என்பது தான் பல்வேறு ஆய்வுகளின் முடிவு ஆகும்.

கல்வி கற்பிப்பதன் நோக்கம் கற்றல் திறன் குறைவாக இருப்பவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக முன்னேற்றுவது தான். ஆனால், அந்த அதிசயம் பெரும்பாலான காலங்களில் நடைபெறுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை. இயல்பாகவே கற்றல் திறன் அதிகமாக உள்ள மாணவர்கள் நன்றாக படித்து முன்னேறுகின்றனர். பள்ளிகள் அவர்களுக்கானவை அல்ல. 10% மதிப்பெண் எடுக்கத் தடுமாறும் மாணவர்களை 60% எடுக்கும் நிலைக்கு முன்னேற்றுவதும், 50% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை 90%க்கும் கூடுதலான மதிப்பெண்களை எடுக்கும் நிலைக்கு உயர்த்துவதும் தான் அரசு பள்ளிகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அப்போது தான் தமிழகம் கல்வியில் சிறக்கும். ஆனால், தமிழக பள்ளிகள் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை. இதற்கான முதன்மைக் காரணம் கற்றல் கட்டமைப்பு வலிமையாக இல்லாததும், ஆசிரியர்கள் பற்றாக்குறையும் தான். அண்மையில் தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை ஒன்றின்படி 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளைக் கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் என்ற அளவில் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு 2 முதல் 3 ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வாறு தரமான கல்வியை வழங்க முடியும்?

மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க தமிழக அரசின் சார்பில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவை மட்டுமே போதாது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். அதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆசிரியர்கள் நியமனத்தை ஓர் இயக்கமாக கருதி மேற்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும்." என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x