நீதிக்காக நடைபெறும் நீண்ட நெடிய போராட்டம்- கும்பகோணம் பள்ளித் தீ விபத்து நினைவு நாளை குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்க பெற்றோர் கோரிக்கை

நீதிக்காக நடைபெறும் நீண்ட நெடிய போராட்டம்- கும்பகோணம் பள்ளித் தீ விபத்து நினைவு நாளை குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்க பெற்றோர் கோரிக்கை
Updated on
2 min read

கடந்த 2004-ஆம் ஆண்டு, கும்பகோணம் பள்ளி தீ விபத்து ஏற்பட்டதன் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தங்கள் குழந்தைகளை பறிகொடுத்த பள்ளியின் அருகே ஒன்று கூடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் மிகச் சிறிய கட்டிட வளாகத்தில் ஸ்ரீகிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி வித்யாலயா ஆங்கிலப் பள்ளி என 3 பள்ளிகள் இயங்கி வந்தன. இதில் 740-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.

இப்பள்ளியில் கடந்த 2004, ஜூலை 16-ம் தேதி, மதிய உணவு சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில், 2-வது மாடியில் கூரை வேயப்பட்ட பூட்டப்பட்ட வகுப்பறைக்குள் இருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 18 குழந்தைகள் பலத்த தீக் காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி, இவரது மனைவியும் பள்ளித் தாளாளருமான சரஸ்வதி, அப்போதைய தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணன் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் விசாரணை 2004, மார்ச் 23-ம் தேதி தொடங்கியது. 2005, ஜூலை 7-ம் தேதி 24 பேர் மீது 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2006, மார்ச் 23-ல் முதல் விசாரணை தொடங்கியது. 2006, ஜூலை 4-ம் தேதி எதிரிகளுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது, 469 பேர் போலீஸ் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். பள்ளி நிறுவனரின் மருமகனும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான பிரபாகரன் அப்ரூவர் ஆகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

எதிரிகளின் பாதுகாப்பு கருதியும் மற்றும் வழக்கில் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்கும் 2006, ஜூலை 12-ல் தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் வழக்கின் 10-வது எதிரியான அன்றைய மாவட்ட கல்வி அலுவலராக இருந்த பாலகிருஷ்ணன் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, பணி மாறுதல் ஆவணங்களை அளிக்காததையும். விபத்து நடப்பதற்கு முன்னரே மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்திருந்தால் இந்த விபத்தே நடக்காமல் தடுத்திருக்கலாம் என்பதையும் சுட்டிக் காட்டி அவரது மனுவை தள்ளுபடி செய்ததோடு, இந்த வழக்கு விசாரணையின் தாமதத்துக்கும் கண்டனம் தெரிவித்து, தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் 6 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து, தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

“இந்த வழக்கின் மொத்த சாட்சிகளான 496 பேரில் அவசியமான 230 சாட்சிகளிடம் மட்டும் 2012, செப்டம்பர் 24 முதல் தொடர்ந்து இருதரப்பு விசாரணை நடத்தப்பட்டு, 2014, ஜூலை 4-ம் தேதி நீதிபதி எம்.என்.முகமது அலி முன்னிலையில் எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் வாதமும் முடிவடைந்தது. ஜூலை 10-ல் அரசுத் தரப்பு வாதமும் முடிவடைந்தது. ஜூலை 31-ம் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், வழக்கு விசாரணையும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாதம் 31-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது” என்கிறார் இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராகிவரும் அரசு கூடுதல் வழக்கறிஞர் இரா.மதுசூதனன்.

உலகத்தையே உலுக்கிய இந்த பள்ளித் தீ விபத்து நடைபெற்று இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் இத்தீர்ப்பு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

“இத்தீர்ப்பு, இதே போல வேறு துயர நிகழ்வுகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இருக்க வேண்டும். இத்துயர விபத்து நடந்த ஜூலை 16-ம் நாளை ஆண்டுதோறும் நாடு முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும்” என பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

இன்று 10-ம் ஆண்டு நினைவஞ்சலிஅனுசரிப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றுகூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

காலை 9 மணி முதல், ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன்பு, குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் தீயில் கருகிய குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மாணவர்கள் என பலரும் வந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனைக் கண்ட அனைவரையும் இந்த நிகழ்வு பாதிக்க செய்வதாக அமைந்தது.

ஜூலை 16-ஆம் தேதி நடந்த அந்த சம்பவத்தில் தனது 2 குழந்தைகளையும், இழந்த இன்பராஜ் என்பவர், தனது இரு குழந்தைகளையும் இழந்த அந்த தினத்தை இன்று நினைத்துப் பார்த்தாலும், அதன் வலி அதிகரிப்பதாகவும் அந்த தவிப்பு சற்றும் குறையாதது என்று கூறினார்.

இந்த சம்பவம் மீதான விசாரணையை ஜூலை 31-க்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த மாதம் 31-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in