ஜெயலலிதா 6-ம் ஆண்டு நினைவு தினம் | இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன், சசிகலா அஞ்சலி; திமுக ஆட்சிக்கு எதிராக உறுதிமொழி

ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா உள்ளிட்டோர்
ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா உள்ளிட்டோர்
Updated on
3 min read

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தைமுன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர்கள்பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொது செயலாளர் டிடிவிதினகரன், சசிகலா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். திமுக ஆட்சியை அகற்றுவோம் என அப் போது தனித்தனியாக உறுதிமொழி ஏற்றனர்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 2016 டிச.5-ம் தேதி காலமானார். அவரது 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வந்திருந்தனர். காலை 7 மணி முதலே, நினைவிடத்துக்கு தொண்டர்கள் வந்து, அஞ்சலி செலுத்தியபடி இருந்தனர்.

காலை 9.40 மணி அளவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வந்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அவர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, செங்கோட்டையன், கே.பி. முனுசாமி, ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுல இந்திரா, செம்மலை, கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.காமராஜ், பா.பெஞ்சமின் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

சிறிது நேரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து அமைதி பேரணியாக ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, ஜேசிடி பிரபாகரன், பெங்களூரு வா.புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் அவருடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இவர்களை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவரை தொடர்ந்து வந்த சசிகலா ஆகியோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா கூறும்போது, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை தமிழக அரசு செய்தாலும், அது திமுகவின் சொத்து இல்லை. இத்திட்ட பயனாளிகள் மிரட்டப்படுகின்றனர். ஆறுகளில் மணல் இஷ்டத்துக்கு அள்ளிக்கொண்டு செல்கின்றனர். அரசுக்கு வருவாய் வரக்கூடிய இடங்களில், திமுக நிர்வாகிகள் சொந்த வருவாயாக மாற்றுகின்றனர். மக்களுக்கு இடையூறாக இருப்போரை கட்சியில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும் என்றார்.

இதனிடையே அஞ்சலி செலுத்திய தலைவர்கள் அனைவரும் தனித்தனியே ஜெயலலிதா நினைவு தின உறுதிமொழிஏற்றுக் கொண்டனர்.

ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி,<br />மெரினா கடற்கரையில் உள்ள அவரதுநினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய<br />அதிமுக இடைக்காலபொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள்.
ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி,
மெரினா கடற்கரையில் உள்ள அவரதுநினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய
அதிமுக இடைக்காலபொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள்.

பழனிசாமி தலைமையில், “எதிரிகளை விரட்டியடிப்போம், துரோகிகளை தூள் தூளாக்குவோம்.தீயசக்தி திமுக ஆட்சிக்கு முடிவு கட்டு வோம். 2024 மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து, நாற்ப தும் நமதே என வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெறுவோம்” என உறுதி ஏற்றனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், ‘அதிமுகவில் தொண்டர்களால்தான் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை தொண்டர்கள் துணையுடன் மீட்டெடுத்து, சர்வாதிகார போக்குக்கு முடிவு கட்டுவோம். கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்ற நிலையை உருவாக்குவோம். திமுகவின் மக்கள் விரோத செயல்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து, மீண்டும் அதிமுக அரசு மலர பாடுபடுவோம்’ என உறுதிமொழி ஏற்றனர்.

டிடிவி தினகரன் தலைமையில், ‘வீரத்தோடும், விவேகத்தோடும் பணியாற்றி, துரோகிகள், தீய சக்திகளை வீழ்த்துவோம். மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம்’ என்றும், சசிகலா தலைமையில், ‘தீயசக்தியிடம் இருந்து மக்களை காப்போம். ஒன்றிணைந்து மக்கள் விரோத திமுக அரசை அகற்றுவோம்’ என்றும் உறுதிமொழி ஏற்றனர்.

இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகிய 4 பேரும் தங்களது ஆதரவு நிர்வாகிகள், தொண்டர்களுடன் தனித்தனியே வந்து, தனித்தனியே உறுதிமொழி ஏற்ற போதிலும், ஆட்சியில் இருந்து திமுகவை அகற்ற வேண்டும் என்பதே அதில் பிரதானமான, பொதுவான உறுதிமொழியாக இருந்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலிதாவின் படத்தை வைத்து மாலை அணிவித்தும், மலர் தூவியும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஜெயலலிதா அபிமானிகள் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு, போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், அவரது உருவப்படத்துக்கு, அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் தீபா செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஜெயலலிதா மரண தேதியில் சர்ச்சை தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். அதிமுக பிளவால் அது இப்போது கட்சியாகவே இல்லை. 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு தான் கட்சியின் நிலை தெரியவரும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in