

சென்னை: தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாயை முந்தைய ஆண்டுகள்போல், ரொக்கமாக ரேஷன் கடையிலேயே வழங்குவதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த ஜனவரியில் பொங்கல் தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வழக்கமான அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை மற்றும் கரும்புடன் பரிசுத் தொகையாக ரூ.1,000 வழங்குவது குறித்தும், அதை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வழங்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. வங்கிக்கணக்கு மூலம் வழங்கும்போது உரிய பயனாளிகளுக்கு தொகை சேருவது உறுதி செய்யப்படும் என்றும், பரிமாற்றம் எளிதாக இருக்கும் என்றும் நிதித்துறை ஆலோசனை வழங்கியது.
இதையடுத்து, குடும்ப அட்டையுடன் வங்கிக்கணக்கு, ஆதார் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, 2.23 கோடி குடும்ப அட்டைகளில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 அட்டைகளில் வங்கிக்கணக்கு, ஆதார் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை இணைக்கும் வகையிலான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தற்போது பொதுமக்களுக்கு ரொக்கமாக 1,000 ரூபாயை நேரடியாக வழங்கலாம் என அதிகாரிகள் தரப்பில் அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையை அரசு தரப்பும் ஏற்கும் என தெரிகிறது. இதன் அடிப்படையில், விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை மற்றும் கரும்புடன் ரூ.1,000 வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.