

குன்னூர்: முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுஹான் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியை ஆய்வு செய்து, பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுஹான், நேற்று ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வந்தார். வெலிங்டன் ஜிம்கானா மைதானத்தில், அவரை முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி முதல்வர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் வரவேற்றார்.
பின்னர் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் அதிகாரிகளிடம் ஜெனரல் அனில் சவுஹான் கலந்துரையாடினார். வேகமாக மாறிவரும் சூழலில் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகாரிகளை தயார்படுத்துவதற்காக கல்லூரி எடுத்துவரும் பல்வேறு முயற்சிகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.
கல்லூரியின் பல்வேறு பயிற்சிநடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பின் திட்டமிடப்பட்ட மேம்படுத்துதல் குறித்து லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் விளக்கினார். பின்னர், பயிற்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் தேசிய பாதுகாப்புக்கான சவால்கள் குறித்தும், ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகள் குறித்தும் தலைமை தளபதி விளக்கினார்.