

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா நேற்று முன்தினம் தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
விழாவின் முதல் புறப்பாடாக நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்தன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு முற்பகல் 11.30 முதல் பகல் 1.30 மணி வரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், சந்தன மண்டபத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
தொடர்ந்து, 2-வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்ப்பிக்கப்பட்டது.
இரவு 11.30 மணி முதல் நேற்று அதிகாலை 2 மணி வரை நம்பெருமாள் முன்பு கைசிக புராணம் எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையுடன் பட்டர்கள் படித்தனர்.
பின்னர், அதிகாலை 5.15-க்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு, 2-ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி, காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்பெருமாள் படியேறும்போது பக்தர்கள் பச்சை கற்பூரப் பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இதை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.