

காலம் தாழ்த்தாமல் படிப்படியாக மதுக்கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், ஏற்கெனவே அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை தற்போதைய ஆட்சியாளர்கள் நிறைவேற்ற முன்வர வேண்டும்.
முன்னாள் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், படிப்படியாக தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. மற்ற மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரமும் குறைக்கப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்றம் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியிருப்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை காலம் தாழ்த்தாமல் படிப்படியாக மூட நடவடிக்கை எடுத்து, பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.