

கோவை: இஸ்லாமியர்களை பயங்கரவாதி களாக சித்தரிப்பது திமுக ஆட்சியில்தான் என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
இது தொடர்பாக கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தைப் பொறுத்தவரை, பாஜகவின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கிறது. இதை நாங்கள் சொல்வதைவிட, திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகனே கூறுகிறார் என்றால், அந்த அளவுக்கு மக்களின் மனங்களில் தாமரை இடம்பிடித்துள்ளது. சிறுபான்மையினரிடையே நற்பெயரை பாஜக பெற்றுள்ளது.
எனவே, திமுக காலம்காலமாக மேற்கொள்ளும் வாக்குவங்கி அரசியல் இனிமேல் தமிழகத்தில் எடுபடாது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆட்சியை தக்கவைக்க, ஊழலை மறைக்க மத அரசியலை கையில் எடுப்பார்கள். இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது திமுக ஆட்சியில்தான். திமுக ஆட்சியில்தான் கார் குண்டுவெடிப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடக்கும்.
இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து இஸ்லாமிய இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்றால் எங்களை கைது செய்கிறார்கள். எனவே, ஜனநாயக ரீதியில் இஸ்லாமிய மக்களிடம் கருத்தியலை பரப்ப காவல்துறை அணுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.