Published : 04 Dec 2016 09:52 AM
Last Updated : 04 Dec 2016 09:52 AM

சென்னையில் 2 நாள் புரோபயாட்டிக் கருத்தரங்கு: தயிர் அதிகம் உட்கொண்டால் மார்பகப் புற்றுநோயை தடுக்கலாம் - ஜப்பான் விஞ்ஞானி தகவல்

பெண்கள் இளம் வயதில் இருந்தே தயிர் அதிகம் உட்கொண்டால் மார்பகப் புற்றுநோயை அறவே தடுக்கலாம் என்று சென்னையில் நடந்த புரோபயாட்டிக் கருத்தரங்கில் ஜப்பான் விஞ்ஞானி மாசநோபூ நானோ தெரிவித்தார்.

தயிர், பாலாடை, ஊறுகாய், ஆப்பிள், சோயா, ஆலிவ், பால் சேர்க்காத டீ, இட்லி, தோசை போன்ற புரோபயாட்டிக் உணவு வகைகளில், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் நுண்ணுயிரிகள் அதிகம் உள்ளன. இந்தியாவில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான 8-வது இந்திய புரோபயாட்டிக் கருத்தரங்கு சென்னை ஐடிசி சோழா ஹோட்டலில் நேற்று தொடங்கியது. பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இதில் பங்கேற்கின்றனர். அதில் நிபுணர்கள் பேசியதாவது:

கருத்தரங்கை தொடங்கிவைத்த சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ மையத்தின் (சிம்ஸ்) இயக்குநர் பேராசிரியர் பி.எஸ்.ராமகிருஷ்ணன்: நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட, ஊட்டச்சத்து மிகுந்த புரோபயாட்டிக் உணவு வகைகள் மூலம் நோயை வரும் முன்பே தடுப்பதுதான் சிறந்த வழி. இதை வலியுறுத்துவதுதான் இக்கருத்தரங்கின் நோக்கம். புரோபயாட்டிக் உணவு வகைகள் இரைப்பையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன்மூலம் குடல் சுத்தப்படுத்தப்படுவதால் பெருங்குடல் புற்றுநோய், வயிற்றுப்போக்கு, குடல்அழற்சி போன்ற நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

ஜப்பான் விஞ்ஞானி டாக்டர் மாசநோபூ நானோ: புரோபயாட்டிக் உணவு வகைகள் மூலம் நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கும் குடல் மைக்ரோ பயோட்டாவை மீட்டெடுப்பதில் எங்களது மருத்துவ ஆய்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. லாக்டிக் அமிலம், பாக்டீரியா, ஐசோபிளேவின் கொண்ட புளிக்கச் செய்த பால் (தயிர்), மார்பகப் புற்றுநோயில் இருந்து தப்பிக்க பெண்களுக்கு சிறந்த உணவு. இதை இளமைப் பருவத்தில் இருந்தே பெண்கள் அதிகம் உட்கொண்டால் மார்பகப் புற்றுநோய் அறவே தாக்காது என ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளோம்.

பெல்ஜியம் விஞ்ஞானி ப்ரூனோபாட்: அன்றாட உணவில் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற புரோபயாட்டிக் நுண்ணுயிரிகள் உள்ளன. இவற்றை உணவோடு, உணவாக உண்ணும்போது நோய்களை வலுவாக எதிர்க்க முடியும் என பல அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. புரோபயாட்டிக், குடல் மைக்ரோ பயோட்டாவால் கர்ப்பிணிகளுக்கு பலன் அதிகம். தாய்ப்பால் சிறந்த நோய் எதிர்ப்பு பானமாக இருப்பதற்கும், அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாக பிறக்கும் குழந்தைகளைவிட வேறுபட்டு காணப்படுவதற்கும் இதுவே காரணம்.

பரீதாபாத் உயிர் மருத்துவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி என்.கே.கங்குலி: இந்த துறை கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. குடல் மைக்ரோ பயோட்டா, புரோபயோட்டிக் நுண்ணுயிரிகள் மூலம் மூளை வளர்ச்சி, மனித நடத்தையைக்கூட கட்டுப்படுத்த முடியும் என்று தற்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஹைதராபாத் இயற்கை ஊட்டச்சத்து மைய முன்னாள் இயக்குநர் பி.ஸேசிகரன்: இந்தியாவில் புரோபயாட்டிக் பொருட்களின் நன்மைகளை மக்களுக்கு அதிகம் எடுத்துரைக்க மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஊட்டச்சத்து நிபுணர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெங்களூரு பேராசிரியர் அனுரா குர்பாத், டாக்டர் ரபேல் மொரீஜ் உட்பட பலரும் பங்கேற்றுப் பேசினர். இதில் நாடு முழுவதும் இருந்து மருத்துவ மாணவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த 2 நாள் கருத்தரங்கு இன்று நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x