

சென்னை: காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் நிலையில், சத்துணவு மையங்களை மூடும்எண்ணம் அரசுக்கு அறவே இல்லை என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். பள்ளிதோறும் பயனாளிகள் எண்ணிக்கை அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை நிரப்பபுள்ளிவிவரங்கள் கோரப்பட்டுள்ளன. 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இந்த மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை. பள்ளி, சத்துணவு மையங்களின் எண்ணிக்கை, பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சத்துணவு திட்டத்தை வலுப்படுத்தவும், தொடர் கண்காணிப்புக்காகவும்தான் அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதில் யாருக்கும் எந்த ஒரு சந்தேகமும் தேவையில்லை. காலை உணவு திட்டம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்திட்டம் முதல்வர் அலுவலகம் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வரும் ஆண்டில் அத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
அப்படியிருக்கும்போது, சத்துணவு மையங்களை எப்படி அரசுமூட முயற்சி எடுக்கும். காலிப்பணியிடங்களை நிரப்பவும், சத்தான உணவை முறையாக வழங்கவும், தொடர் கண்காணிப்பை வலுப்படுத்தவுமே அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.