

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இளைஞரின் கண்ணுக்குள் இருந்த மரத்துண்டு என்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் மூக்கின் வழியாக அகற்றப்பட்டது. சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் பார்வை இழப்பு தவிர்க்கப்பட்டது.
சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூரை சேர்ந்தவர் முல்லை வேந்தன் (33). கடந்த மாதம்21-ம் தேதி சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இடதுகண்ணில் பிரச்சினை இருந்ததால், எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பரிசோதனையில், இடது கண்ணில் பார்வைக் குறைபாடு மற்றும்இரட்டை பார்வை பிரச்சினை இருப்பது தெரிந்தது. மேலும், கண்ணின் உள்ளே மரத்துண்டு ஒன்று கண் நரம்பை அழுத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனை டீன் தேரணிராஜன் வழிகாட்டுதலின்படி, காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறை பேராசிரியர் மருத்துவர் சங்கர் தலைமையில் மருத்துவர்கள் அன்பழகன், குமார், அல்பினா, நிரஞ்சன், சுமதி ஆகியோர் கொண்ட குழுவினர் என்டோஸ்கோப்பி சிகிச்சை முறை மூலம் மூக்கின் வழியாக சுமார் 10 செமீ அளவுள்ள மரத்துண்டை வெளியே எடுத்தனர்.
இது தொடர்பாக டீன் தேரணிராஜன், மருத்துவர் சங்கர் ஆகியோர் கூறும்போது, “சாலை விபத்தில் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கண்ணுக்குள் மரத்துண்டு சென்றதால் அவருக்குக் கண்ணில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. என்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் கண்ணுக்குள் இருந்த மரத்துண்டு அகற்றப்பட்டுவிட்டது.
பார்வை குறைபாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து மரத்துண்டு அகற்றப்பட்டதால் பார்வை இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவானமருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்மூலம் இலவசமாகச் செய்யப்பட்டுள்ள இந்த சிகிச்சையை தனியார்மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும்” என்றனர்.