ரிசர்வ் வங்கி உத்தரவை விலக்க வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

ரிசர்வ் வங்கி உத்தரவை விலக்க வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

வங்கியில் பணம் செலுத்த வரும் வாடிக்கையாளர்களிடம் அறிக்கை பெற வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவை விலக்க வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் தே.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசியதாவது:

மத்திய அரசால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நாளில் இருந்து வங்கி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ள மன உளைச்சலும், பணிச்சுமையும் சொல்லில் அடங்காதது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் காரணமாக வாடிக்கையாளர் அனைவரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனால் வங்கியின் சேவை மற்றும் அதன் செயல்பாடுகள் மதிப்பிழந்து போயுள்ளன. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட மற்றொரு அறிவிப்பானது நிலைமையை இன்னும் சீர்கேடாக்கியுள்ளது. அந்த அறிவிப்பின் தெளிவற்ற நிலையின் காரணமாக அரசாங்க புலனாய்வுத் துறையின் பணிகள் வங்கி அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பணம் செலுத்த வரும் வாடிக்கையாளர்களிடமிருந்து இரண்டு வெவ்வேறு அதிகாரிகளால் அறிக்கை பெறப்பட வேண்டும். அந்த அறிக்கையின் தன்மையைப் பொறுத்து சம்பந்தப் பட்ட அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் எனும்பொழுது வாடிக்கை யாளர்களிடம் அதிருப்தி மற்றும் மோதல் போக்கையும், பிற்காலத்தில் அரசாங்க நிறுவனங்களின் விசாரணை யையும் ஒருங்கே எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர்.

தற்போது வங்கிகளில் ஒரே ஒரு அதிகாரி மட்டுமே பணிபுரியும் சூழ்நிலையில் இந்த நடைமுறையை பின்பற்ற இயலாது. இச்சூழ்நிலையில் இப்புதிய கட்டுப்பாடுகள் வங்கி ஊழியர்களின் செயல்வரைமுறைக்கு தொடர்பில்லாதவையாக உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in