இலவச கால்நடைகள் திட்டத்தால் பொருளாதாரம் உயர்ந்துள்ளது: அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேச்சு

இலவச கால்நடைகள் திட்டத்தால் பொருளாதாரம் உயர்ந்துள்ளது: அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேச்சு
Updated on
1 min read

தமிழக அரசின் இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகள் வழங் கும் திட்டத்தால் கிராமப்புற பெண் களின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளது என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வளத்தோட்டம் ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு ரூ.16.86 லட்சம் செலவில் கறவை பசுக்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கறவை பசுக்களை வழங்கி பேசியதாவது:

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த செப்டம்பர் 2011 முதல் ஒரு பயனாளிக்கு 4 வெள்ளாடுகள் அல்லது 4 செம்மறி ஆடுகள் மற்றும் கறவை பசுக்களை இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் இதுவரை 2,650 பயனாளிகளுக்கு தலா 1 கறவை பசு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 15,179 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 60,716 ஆடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு எந்தவித நிதி உதவியும் செய்யாத நிலையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்றார் அவர்.

முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வளத்தோட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் சின்னையா தொடங்கிவைத்து கிராம மக்களுடன் சேர்ந்து புகைப்படங்களைப் பார்வை யிட்டார்.

நிகழ்ச்சியில் உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ பா.கணேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர் செல்வம், காஞ்சிபுரம் நகரமன்றத் தலைவி மைதிலி திருநாவுக்கரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in