Last Updated : 05 Dec, 2022 02:28 PM

1  

Published : 05 Dec 2022 02:28 PM
Last Updated : 05 Dec 2022 02:28 PM

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,660 விலை... சத்தீஸ்கர் முதல்வரை பாராட்ட புறப்பட்ட தமிழக விவசாயிகள்

கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இன்று காலை புறப்பட்ட விவசாயிகள்.

தஞ்சாவூர்: இந்தியாவிலேயே எந்த மாநிலமும் அறிவிக்காத விலையாக, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2260 விலையாக அறிவித்த, சத்தீஸ்கர் மாநில முதல்வரை நேரில் பாராட்டுவதற்காக, தமிழகத்திலிருந்து இன்று காலை (டிச.5-ம் தேதி) 15 பேர் கொண்ட விவசாயிகள் குழு சத்தீ்ஸ்கருக்கு புறப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அம்மாநில விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2660 , கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் விலையாக அறிவித்துள்ளார். மேலும் நிகழாண்டு 98 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

விவசாயிகளின் உற்பத்தி செலவுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலையை அறிவித்த சத்தீஸ்கர் மாநில முதல்வரை நேரில் சென்று பாராட்டிட உரிய அனுமதியை தமிழக விவசாயிகள் கேட்டனர். இவர்களுக்கு உடனடியாக டிச.6-ம் தேதி மாலை முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் தலைமையில் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் 3 பெண் விவசாயிகள் உள்பட 15 பேர் இன்று காலை ரயில் மூலம் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டனர்.

இதுகுறித்து சுந்தரவிமல்நாதன் கூறியதாவது: ”உணவு உற்பத்தியை இயன்றவரை பல மடங்காக பெருக்கிடவும், கால்நடைகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினால் மட்டுமே கிராமங்களும், உழவர்களும் தற்சார்பு உள்ளவர்களாக மாறி வாழ வழிவகை செய்ய வேண்டுமென்றால், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது ஓரளவுக்காவது நியாயமானதாக கிடைத்திட வேண்டும் என்ற உயர்ந்த நல்லெண்ணத்தில், சத்தீஸ்கர் மாநில உழவர்களுக்கு அம்மாநில முதல்வர் கொடுத்த வாக்குறுதியை செயல்படுத்தி நெல் குவிண்டாலுக்கு ரூ.2,660-ம், கரும்புக்கு இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் தராத விலையாக கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 4,000-ம் கொள்முதல் விலை வழங்கி, நெல் கொள்முதலில் சத்தீஸ்கர் மாநிலம் இவ்வாண்டில் சுமார் 98 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தியை இலக்காகக் கொண்டு வரலாற்று சாதனையை பதிவு செய்வதாக மேலும் விவசாய இடுபொருட்கள் வாங்க ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நெல் குவிண்டால் ரூ,2065, கரும்பு ரூ.2,925 வழங்கப்படுகிறது. ஆனால் உழவர்களை ஆதரித்து வருகின்ற சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின், விவசாய சேவையை பாராட்டி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பாக அவருக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி, சீரக சம்பா, தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா நெற்கதிர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிவிக்கவும், தென்னங்கன்றுகள், பாரம்பரிய நெல்லில் தயாரிக்கப்பட்ட மணமூட்டும் அவல், நெற்பயிர் கொத்துக்களையும் நேரில் வழங்கி, தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதுமுள்ள நெல் விவசாயிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்க உள்ளோம்.

இதற்காக டிச.6 ம் தேதி மாலை எங்களுக்கு முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மறுநாள் சத்தீஸ்கர் மாநிலத்தில் நெல் சாகுபடி, கொள்முதல் தொடர்பான நேரிடையாக இட இடங்களை மாநில முதல்வர் ஏற்பாட்டின் படி காண இருக்கிறோம். இதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து உழவர்கள் ரயில் மூலம் புறப்பட்டுள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x