

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. அதேவேளையில், நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
இந்த டெண்டரில், புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து, விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு, விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், மேம்பாட்டு பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சமூக தாக்க மதிப்பீட்டு அறக்கை, விமான நிலைய மேம்பாடு தொடர்பாக மாஸ்டர் பிளான், திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்த டெண்டரை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி, 2023-24 ஆண்டு முதல் 2069-70 ஆண்டு வரை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் விமான போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகரிக்கும் ஆகியவை தொடர்பாகவும் அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது.