Published : 05 Dec 2022 11:19 AM
Last Updated : 05 Dec 2022 11:19 AM
சென்னை: அதிமுகவை கட்டிக்காப்போம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து வெற்றி காண்போம் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் உறுதிமொழி ஏற்றார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இபிஎஸ் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தனது ஆதரவாளர்களுடன் உறுதிமொழி ஏற்றார். அப்போது அவர் உறுதிமொழியை வாசிக்க தொண்டர்கள் வழிமொழிந்தனர்.
இபிஎஸ் உறுதிமொழியில், "எதிரிகள் ஒருபுறம், துரோகிகள் மறுபுறம் என்றிருக்கும் சூழல் பொய்வழக்குகளை முறித்து சதிவலைகளை அறுப்போம். குடும்ப ஆட்சியின் கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப சபதம் ஏற்போம். அதிமுக என்பது ஆயிரங்காலத்து பயிர். தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றி தழைத்து நிற்கும் ஆலமரம். இதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. அதிமுகவை கட்டிக்காப்போம். இந்திய அரசியல் சரித்திர வானில் நாடாளுமன்றத்தின் 3வது பெரிய கட்சியாக கழகத்தை மாற்றியவர் ஜெயலலிதா.நாடாளுமன்றத் தேர்தலுக்காக வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து வரலாற்று வெற்றிக்கு சூளுரைப்போம். நாற்பதும் நமதே நாளையும் நமதே என்று சபதம் ஏற்போம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று வெற்றி முழக்கமிட்டு திக்கெட்டும் வெற்றியை படைத்திடுவோம். அதற்காக அயராது உழைப்போம்.
கழகத்தின் வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம் என்று உறுதியேற்போம். தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம். புரட்சித் தலைவியின், புரட்சித் தலைவரின் பெரும்புகழையும் எந்நாளும் போற்றிடுவோம். களங்கள் அனைத்திலும் வென்றிடுவோம். கழகத்தை இமயமாய் உயர்த்திடுவோம் என்று உளமார உறுதியேற்போம். வாழ்க அண்ணா புகழ். வளர்க்க எம்ஜிஆரின் பெரும்புகழ். ஓங்குக அம்மாவின் நெடும்புகழ். வெல்க வெல்க வெல்கவே. அஇஅதிமுக என்றும் வெல்க வெல்க வெல்கவே" என்று கூற தொண்டர்கள் அதை அவரைப் பின் தொடர்ந்து முழங்கினர்.
அதிமுக தற்போது பழனிசாமி, பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் 3 அணியாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் தனித்தனியே அமைதி பேரணியாக வந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். முதலில் இபிஎஸ் தன் அணியினருடன் அஞ்சலி செலுத்திய நிலையில் காலை 11 மணியளவில் ஓபிஎஸ் தனது அணியினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT