சென்னையில் நேற்று முன்தினம் இரவு வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் பலி: 5 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சென்னையில் நேற்று முன்தினம் இரவு வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் பலி: 5 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Updated on
1 min read

சென்னையில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் மட்டும் வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் உயிர் இழந்துள்ளனர். கார் தீப்பிடித்த விபத்தில் 5 மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). கார்பென்டர். இவர் தனது நண்பர் ஏழுமலையுடன் நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த வேன் மோதிய விபத்தில் ரமேஷ் படுகாயம் அடைந்து உயிர் இழந்தார். நண்பருக்கு அருகில் உள்ள மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், பரங்கிமலை ஜிஎஸ்டி சாலையில் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், அவர் உயிர் இழந்தார். அவர் யார்? விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது? என கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.

தேனியைச் சேர்ந்தவர் பிரசன்னா (23), கோவையைச் சேர்ந்தவர் நவீன் (23). இருவரும் நண்பர்கள். சிறுசேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர்களாக பணி செய்து வந்தனர். இவர்கள் சோழிங்கநல்லூர் ராஜீவ்காந்தி சாலை வழியாக ஒரே பைக்கில் சென்று கொண்டு இருந்தபோது பின்னால், வந்த சரக்கு வேன், பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். கிண்டி போலீஸார் வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் திருநெல்வேலியைச் சேர்ந்த ஆறுமுகத்தை கைது செய்துள்ளனர்.

அதேபோல் வடபழனி முருகன் கோயில் அருகே சாலையோரம் படுத்திருந்த அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (55) என்பவர் மீது கார் மோதி உயிர் இழந்தார்.

மேலும் அண்ணா நகரைச் சேர்ந்த 5 மாணவர்கள் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப் பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற மரத்தின் மீது மோதி தீப்பிடித்து நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 மாணவர்களும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in