வேளாண் திட்டங்களில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 20℅ கூடுதல் மானியம்: உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

வேளாண் திட்டங்களில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 20℅ கூடுதல் மானியம்: உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு, விவசாயிகள், அரசின் வேளாண் திட்டங்களில் கூடுதலாக 20 சதவீதம் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம என்று அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வேளாண் நிதிநிலை அறிக்கையில், ‘அரசால் செயல்படுத்தப்படும் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு, 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

பயிர் சாகுபடியுடன், கறவை மாடு உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவீதம், அதாவது ரூ.50 ஆயிரம் மானியத்துடன், கூடுதலாக ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.70 ஆயிரம் மானியம் வழங்கப்படும். கூடுதல் மானியத்துக்காக ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வெள்ளரி, குடை மிளகாய், கார்னேஷன் கொய்மலர், ரோஜா கொய்மலர் போன்ற பயிர்களில் பசுமைக்குடில் அல்லது நிழல்வலைக்குடில் அமைக்க தேசிய தோட்டக்கலை இயக்கம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவீத மானியம் என மொத்தம் 70 சதவீத மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில், 70 சதவீதம் மானியம் வழங்க, ரூ.2.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, விவசாயிகளுக்கு டிராக்டர்கள், மினி டிராக்டர்கள், பவர்டில்லர்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் என, மொத்தம் 70 சதவீத மானியம் வழங்கப்படும்.

அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்களுக்கு, சூரிய கூடார உலர்த்திகள் அமைப்பது, எண்ணெய் செக்கு, சிறிய பருப்பு உடைக்கும் இயந்திரம், மிளகாய் பொடியாக்கும் இயந்திரம் போன்றவற்றுக்கு 40 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது. ஆதிதிராவிட பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் என 60 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க, அனைத்துப் பிரிவைச் சார்ந்த விவசாயக் குழுக்களுக்கு, 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

இந்த மானியங்களைப் பெற, வருவாய்த் துறையினால் வழங்கப்படும் ஆதிதிராவிட, பழங்குடியினருக்கான சான்றிதழும், சிறு, குறு விவசாயிகள் என்ற சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். உழவன் செயலி மூலமாகவோ அல்லது https://www.tnagrisnet.tn.gov.in, https://tnhorticulture.tn.gov.in, https://aed.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in