Published : 05 Dec 2022 07:32 AM
Last Updated : 05 Dec 2022 07:32 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விரைவில் ஆளுநரை கண்டித்து போராட்டம்: போட்டி அரசு நடத்துவதாக இந்திய கம்யூனிஸ்டும் விமர்சனம்

பெரம்பலூர்/ஸ்ரீ வில்லிபுத்தூர்: தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத தமிழக ஆளுநரைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரைவில் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடும் என அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பெரம்பலூருக்கு நேற்று வந்தஅவர், துறைமங்கலத்தில் உள்ளகட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசு நிறைவேற்றிய 60-க்கும் அதிகமான மசோதாக்கள், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் அலுவலகங்களில் நீண்டகாலமாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது, தமிழக மக்களுக்கு இழைக்கும் துரோகம். இந்தச் செயல், மாநில அரசின் செயல்பாட்டை முடக்குவதாகும்.

கடும் கண்டனம்: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல், அதனால் நேரிடும் உயிர் பலிகளுக்கு ஆளுநர் உடன்படுகிறார். இதுகுறித்து தமிழக சட்டத் துறை அமைச்சர், நேரில் ஆளுநரைச் சந்தித்து விளக்கம் அளித்த பிறகும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

தமிழக ஆளுநரைக் கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீவிர போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட்:

தமிழக அரசுக்கு எதிராகப் போட்டி அரசாங்கத்தை ஆளுநர்ஆர்என்.ரவி நடத்திக் கொண்டிருக்கிறார், என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூரில் அவர் கூறியதாவது: ஆன்லைன் சூதாட்டம் மூலம் 25 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. அது குறித்து விளக்கம் கேட்பது என்ற பெயரால் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது.

ஒரு மாநிலத்துக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் வந்தால் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வது உள் துறை அமைச்சகம்தான். ஆனால் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.

விந்தையாக உள்ளது:

அண்ணாமலை மற்றும் ஆளுநர் ரவி ஆகியோர் காவல் துறை அதிகாரிகளாக இருந்தவர்கள். அவர்களுக்கு பிரதமர் பாதுகாப்பு குறித்த நடைமுறை நன்கு தெரியும். ஆனால் தலைமைச் செயலரிடம் ஆளுநர் விளக்கம் கேட்டிருப்பது விந்தையாக உள்ளது. ஆளுநர் உள்துறை அமைச்சகத்திடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக எம்பிகள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

ஆளுநர்தமிழக அரசுக்கு எதிராகப் போட்டி அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார். ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிச.29-ல்சென்னை ராஜ் பவன் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x