

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பள்ளி வளாகம் முழுவதும் தீ வைத்து எரித்து சேதமாக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர்.
அந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலித்த நீதிமன்றம் இன்று (டிச.5) முதல் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மைக் கல்வி அலுவலர் சரஸ்வதி ஆகியோர் நேற்று பள்ளியை பார்வையிட்டு, பள்ளிக் கட்டிடத்தின் 3-வது தளத்தை தவிர்த்து இதர 3 தளங்களில் வகுப்புகள் நடத்த அனுமதியளித்தனர். 3-வது தளத்துக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது.