

கோவை: மேட்டுப்பாளையம்-கோவை இடையே ஞாயிற்றுக்கிழமையும் மெமு ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று தொடங்கிவைத்தார்.
முன்பதிவில்லாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் ஞாயிறு தவிர வாரத்தில் 6 நாட்கள் மேட்டுப்பாளையம்-கோவை இடையே இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இதில் 6 ரயில்களை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. அதில், மேட்டுப்பாளையம்-கோவை இடையிலான ஒரு ரயில் சேவையை மேட்டுப்பாளையத்தில் மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசும்போது, “மேட்டுப்பாளையம்-கோவை இடையிலான ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுவதால் வியாபாரிகள், மாணவர்கள், உதகையில் இருந்து கோவை செல்லும் சுற்றுலா பயணிகள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் ரயில் பயணிகள் சங்கத்தினர், வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் தமிழகத்துக்கு பல திட்டங்களை வழங்க தயாராக இருக்கிறார். பிரதமர் மோடி ரயில்வே துறையை உலக தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
ரயில் நிலையங்கள் விமானநிலையங்கள் போல நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே கழிப்பறைகள் பயோடாய்லெட்களாக மாற்றப்பட்டுள்ளன” என்றார். பின்னர், மேட்டுப்பாளையம்-கோவை இடையிலான ரயில் பயண கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.30-ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் எல்.முருகனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பேருந்தில் வந்து சேர இரண்டரை மணி நேரம் ஆகிறது.
அதற்கு ரூ.27 வரை கட்டணமாக பெறுகின்றனர். போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் அந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஆனால், ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு 40 நிமிடத்தில் சென்றுவிடலாம். கரோனா காலத்தில் பயணிகள் ரயில்கள் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டன. அதை இங்கு மட்டுமே செயல்படுத்தவில்லை. நாடு முழுவதும் செயல்படுத்தியுள்ளனர்.
அது மத்திய அரசின் கொள்கை முடிவு. கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதற்கான சாத்தியக்கூறு இருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த நிகழ்வில் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.