Published : 05 Dec 2022 06:25 AM
Last Updated : 05 Dec 2022 06:25 AM

செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்துவரும் திட்ட பணிகளை தலைமை செயலர் வெ.இறையன்பு ஆய்வு

தாம்பரம் பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு. உடன் உயர் அதிகாரிகள்.

பூந்தமல்லி: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட திட்டப் பணிகளை பார்வையிட்ட தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, குடியிருப்புகளில் மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி பகுதியில் 29 இடங்களில் ரூ.89 கோடியே 64 லட்சம் செலவில் 25 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நடைபெற உள்ள இடங்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று பார்வையிட்டார்.

தாம்பரம் மாநகராட்சி அம்பாள் நகர், திருமலை நகர் வள்ளல் யூசுப் நகர் பகுதிகளில் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார். மழைநீர் தேங்காமல் நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள திட்ட மதிப்பீட்டுக்கு உரிய அனுமதி பெற்று பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் அப்போது உத்தரவிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை வழியாக சிக்கராயபுரம் கல்குவாரிக்கு மழை வெள்ளத்தை திருப்புவதற்காக நசரத்பேட்டையில் நடந்து வரும் ராட்சத கால்வாய்கள் அமைக்கும் பணியையும் செம்பரம்பாக்கம் மதகில் இருந்து வெளியேறும் உபரி நீரை கட் அண்ட் கவர் கால்வாய் மூலம் கல்குவாரிக்கு கொண்டு வரும் பணிகளையும் அது குறித்த வரைபடங்களையும் தலைமைச் செயலர் ஆய்வு செய்தார்.

குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் எவ்வாறு அகற்றப்பட்டது என்பது குறித்தும் அந்த பகுதிகளில் புதிதாக மழை நீர் கால்வாய் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதம் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட சுந்தரசோழபுரம், ஏழுமலை நகர், சக்தி நகர், பாலகிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. மீண்டும் இந்தப் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனையும் தலைமைச் செயலர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அவர் மழைக்காலங்களில் அயனம்பாக்கம் ஏரி உபரி நீரை கூவம் ஆற்றில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், தாம்பரம் மேயர் வசந்த குமாரி, ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் உட்பட மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x